மக்கள் தொகையில் முதலிடம் பிடித்தால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆகலாம்: இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு

ஐக்கிய நாடுகள்: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நாடுகள் தங்களின் வீட்டோ அதிகாரத்தின் மூலம் சர்வதேச விவகாரங்களில் முடிவெடுப்பதில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த கவுன்சிலில் மாற்றங்கள் செய்து, இந்தியாவையும் நிரந்தர உறுப்பினராக்க வேண்டுமென நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, ஐநா நேற்று முன்தினம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அடுத்த ஆண்டே சீனாவை முந்தி இந்தியா உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் என புள்ளி விவரங்கள் தெரிவித்தன. தற்போது, இந்தியாவின் மக்கள் தொகை 141.2 கோடியாகவும், சீனாவின் மக்கள் தொகை 142.6 கோடியாகவும் இருப்பதாக ஐநா கூறி உள்ளது.

இந்நிலையில், ஐநாவின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறையின் மக்கள் தொகை பிரிவு இயக்குநர் ஜான் வில்மோத் நேற்று அளித்த பேட்டியில், ‘‘உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாக இருப்பதன் முக்கியத்துவம் என்ன தெரியுமா? இதன் மூலம், சில சலுகைகளை பெற முடியும். குறிப்பாக, இந்த விவகாரம் ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் எண்ணிக்கையில் மாற்றத்தையும் கொண்டு வரக்கூடும். இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறினால், பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக வேண்டுமென்ற அவர்களின் கோரிக்கைக்கு அது வலுசேர்க்கும்,’’ என்றார். எனவே, மக்கள் தொகை அதிகரிப்பால் பல பாதகங்கள் இருந்தாலும், சில சாதகமான விஷயங்களும் இருப்பதை ஐநா உணர்த்தி உள்ளது.

Related Stories: