பும்ரா வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி: கேப்டன் ரோகித் அதிரடி

லண்டன்: இங்கிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் காயம் காரணமாக விராத் கோஹ்லி இடம் பெறவில்லை. ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ இருவரும் இங்கிலாந்து இன்னிங்சை தொடங்கினர். பும்ரா வீசிய 2வது ஓவரில் ஜேசன் ராய், ஜோ ரூட் இருவரும் டக் அவுட்டாகி வெளியேற, இங்கிலாந்துக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அதில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே ஷமி வேகத்தில் பென் ஸ்டோக்ஸ் கோல்டன் டக் அவுட்டாக, இங்கிலாந்து 2.4 ஓவரில் 7 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. பேர்ஸ்டோ 20 பந்தில் 7 ரன் எடுத்து பும்ரா வேகத்தில் விக்கெட் கீப்பர் பன்ட் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 8 பந்துகளை சந்தித்து 1 ரன் கூட எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

கடுமையாகப் போராடிய கேப்டன் பட்லர் - மொயீன் அலி ஜோடி 6வது விக்கெட்டுக்கு 27 ரன் சேர்த்தது. மொயீன் 14 ரன் எடுத்து பிரசித் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேற, பட்லர் 30 ரன் (32 பந்து, 6 பவுண்டரி) விளாசி ஷமி வேகத்தில் சூரியகுமாரிடம் பிடிபட்டார். கிரெய்க் ஓவர்ட்டன் 8, பிரைடன் கார்ஸ் 15 ரன், டேவிட் வில்லி 21 ரன்னில் (26 பந்து, 3 பவுண்டரி) பெவிலியன் திரும்ப, இங்கிலாந்து 25.2 ஓவரில் 110 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இது ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக அந்த அணி எடுத்த மிகக் குறைந்தபட்ச ஸ்கோராகும். இந்திய பந்துவீச்சில் பும்ரா 7.2 ஓவரில் 3 மெய்டன் உள்பட 19 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து அரை டஜன் விக்கெட்டை கைப்பற்றினார். ஒருநாள் போட்டிகளில் இது அவரது சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. ஷமி 3, பிரசித் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 111 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

கேப்டன் ரோகித், ஷிகர் தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். தவான் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியில் இறங்கிய ரோகித் 49 பந்தில் அரை சதம் அடித்தார். இவர்களைப் பிரிக்க இங்கிலாந்து பவுலர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்தியா 18.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 114 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ரோகித் 76 ரன் (58 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்), தவான் 31 ரன்னுடன் (54 பந்து, 4 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரோகித் - தவான் ஜோடி 18வது முறையாக முதல் விக்கெட்டுக்கு 100 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடக்கிறது.

Related Stories: