×

பவானியம்மன் கோயில் ஆடித்திருவிழா அரசு துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் புகழ்பெற்ற ஸ்ரீபவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆடித்திருவிழா வரும் ஜூலை 17ம் தேதி தொடங்குகிறது. இந்த விழா 14 வாரங்கள் நடைபெறும். இத்திருவிழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா  என பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ்,  வேன்,  ஜீப், லாரி, ஆட்டோ,  மாட்டு வண்டி  உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.

இந்நிலையில், ஆடித்திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பது அளிப்பது குறித்தும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்தும் அரசுத்துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் நேற்று  முன்தினம் பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் திருவள்ளூர் மாவட்ட உதவி இயக்குனர் ரூபேஷ் குமார்  தலைமை தாங்கினார்.  ஒன்றிய குழு தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் சுரேஷ், தாசில்தார் ரமேஷ்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி,  ஸ்டாலின், துணை தாசில்தார் நடராஜன், கோயில் அறங்காவலர் அஞ்சன் லோகமித்ரா  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கோயில் செயல் அலுவலர் பிரகாஷ் கூறும்போது, `கோயிலை சுற்றி கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக 50 சிசிடிவி கேமரா பொறுத்தப்படவுள்ளது’ என்றார். மேலும் சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி  கூறும்போது, `ஆடித்திருவிழாவின்போது (சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்)   சுகாதார பணியாளர்கள் 100 பேரும்,  மற்ற நாட்களில் 80 பேரும் சுகாதார பணிகளில் ஈடுபடுவார்கள். வாரத்தில் 7 நாட்களில் 4 நாட்கள் கொசு ஒழிப்பு பணிகள் செய்யப்படும்.  சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  வாரத்தில் சனி,  ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும்.  கழிவறைகள் 59 உள்ளது.

கூடுதலாக 20 கழிவறைகள் தேவை’ என கூறினார். மேலும் ஆடித்திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பஸ் வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் பாதுகாப்பு  உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் 14 வாரத்திற்கு ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி தலைமையில் 150 போலீசார், 50 ஊர்காவல் படையினர்  என 200 பேர்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்  என தீர்மானிக்கப்பட்டது.  இந்த கூட்டத்தில் போக்குவரத்துத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் குணசேகரன்,  சுரேஷ்,  சீனிவாசன்,  அப்புன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags : Bavaniyamman Temple , Bhavaniyamman Temple Adi Thirujuja Government Department Officials Consultation Meeting
× RELATED பவானியம்மன் கோயிலில் சிறுமியிடம் செயின் பறிப்பு; பெண் கைது