திருவள்ளூரில் கத்தியை காட்டி வாலிபரை கொலை செய்ய முயற்சி: ரவுடி கைது; 2 பேருக்கு வலை

திருவள்ளூர்: திருவள்ளூரில் சாலையில் நடந்து சென்ற வாலிபரை மடக்கி கத்தியால் கொல்ல முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை வலைவீசி தேடிவருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்ராஜன்(22), நேற்று காலை திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் உழவர் சந்தை அருகே சொந்த வேலையாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 வாலிபர்கள் கையில் மது பாட்டிலுடன் மது அருந்தியவாறு தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு அவ்வழியே வந்துள்ளனர். இதனைக்கண்ட சதீஷ்ராஜன், `ஏன் இப்படி பேசுகிறீர்கள்’ என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த 3 நபர்களும் சதீஷ்ராஜனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் பலமாக தாக்கிவிட்டு இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து வெட்டி கொல்ல முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ்ராஜன் அவர்களிடம் இருந்து தப்பினார்.

இதுகுறித்து சதீஷ்ராஜன் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் திருவள்ளூர் பத்தியால்பேட்டை புங்கத்தூர் பகுதியை சேர்ந்த தனுஷ்(18) என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது ஏற்கனவே இருசக்கர வாகன திருட்டு, வழிப்பறி, கொள்ளை என பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இவரது கூட்டாளிகள் சதீஷ் மற்றும் சரவணன் என்பதும் தெரிந்தது. இதனையடுத்து புங்கத்தூர் பகுதியில் பதுங்கியிருந்த தனுஷை திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் பத்மஸ்ரீபபி தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் சதீஷ், சரவணன் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: