×

பூந்தமல்லியில் 5வது மாடியில் இருந்து தவறி விழுந்து 4 வயது சிறுமி பரிதாப பலி

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடி டிரங்க் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவி(35), இவர் பூந்தமல்லி நகராட்சியில் வருவாய் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சிந்தியா. இவர்களுக்கு ஆரோ(8) என்ற மகனும், வின்சி(4) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை ரவி கோயிலுக்கு சென்றார். அவரது மகன் கால்பந்தாட்ட பயிற்சிக்கு சென்று விட்டார். அப்போது, வின்சி தூங்கிக்கொண்டு இருந்ததால் சிந்தியா வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது வின்சியை காணவில்லை. அக்கம்பக்கத்தினரிடம் கேட்டபோது வின்சி கீழே விளையாடிக்கொண்டிருப்பதாக  கூறியுள்ளனர். பூட்டிய வீட்டில் இருந்து மகள் எப்படி வெளியே வந்தாள் என்று சந்கேதத்துடன் கிழே வந்து பார்த்தபோது சிறுமி மயங்கி கிடந்தாள்.

இதையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் குடியிருப்பில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுமி மாடியின் மேல் இருந்து கீழே விழுந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்: நேற்று காலை வழக்கம்போல் சிறுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது வீட்டில் இருந்த மூன்று பேரும் கதவை மூடிவிட்டு வெளியே சென்றுள்ளனர். தூக்கத்தில் இருந்து எழுந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாததை கண்டு அழுதாள். பின்னர் வீட்டின் பின் பகுதியில் உள்ள கதவை திறந்து பால்கனி வழியாக வந்து அங்கிருந்த சேர் மீது நின்று சத்தம் போட்டு அழுதாள். அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி 5வது மாடியில் இருந்து கீழே விழுந்தாள்.

சிறிது நேரம் கழித்து அந்த வழியாக வந்த காவலாளி சிறுமி கீழே படுத்திருப்பதை கண்டு சிறுமியை எழுப்பியபோது சிறுமி மயக்கமாக இருப்பதாக கூறியதையடுத்து பக்கத்து வீட்டில் ஒப்படைத்துள்ளார். அதன் பின்னர் சிறுமியின் தாயார் திரும்பி வந்து, பார்த்தபோது சிறுமி மயக்கமாக இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி இறந்து விட்டாள். மாடியில் இருந்து கீழே விழுந்ததில் காயம் அடைந்து சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Poondamalli , A 4-year-old girl tragically died after falling from the 5th floor in Poontamalli
× RELATED மதுரவாயலில் பரபரப்பு வங்கி மேலாளர் தற்கொலை: போலீசார் விசாரணை