உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் உறுதி மொழி ஏற்பு

திருவள்ளூர்: உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1987ம் ஆண்டு உலக மக்கள் தொகை 500 கோடியை தாண்டியது. அதைத்தொடர்ந்து உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் தாக்கத்தையும், தீய விளைவுகள் ஏற்படுவதையும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை 1989ம் ஆண்டு ஜூலை 11ம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்க வேண்டி தீர்மானித்தது. தற்போதைய இந்தியாவின் மக்கள் தொகை 140.6 கோடியாக உள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் `நமது தாய் நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கும், தாய்மார்களின் நல்வாழ்விற்கும், குழந்தைகளின் ஒளிமயமான எதிர் காலத்திற்கும், மக்கள்தொகை பெருக்கத்தினைக் கட்டுப்படுத்துதல் முதன்மையானதும், முக்கியமானதும் ஆகும் என்பதை நான் அறிந்துள்ளேன்.

சிறு குடும்ப நெறி, திருமணத்திற்கேற்ற வயது, முதல் குழந்தையை தாமதப்படுத்த மேற்கொள்ள வேண்டிய குடும்ப நல முறைகள், முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையே தேவையான இடைவெளி, ஒரு பெண் கருவுற்ற காலத்தில் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல், தாய் சேய் நலத்தை பாதுகாத்தல், பெண் கல்வியை மென்மேலும் ஊக்குவித்தல், ஆணும், பெண்ணும் சமம் என்பதற்கு செயல்வடிவம் கொடுத்தல், பெண் சிசுக்கொலையை தடுத்தல், இளம் வயது திருமணத்தை தடுத்தல், இளம் வயது கர்ப்பத்தை தடுத்தல், மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைத்தல், சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுத்தல், மரம் வளர்ப்பதை ஊக்குவித்தல், வறுமை ஒழிப்பு போன்ற செய்திகளை அனைவருக்கும் எடுத்துக் கூறுவதில் என்னை நான் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன்’ என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உறுதி மொழியினை வாசிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள், செவிலியர் மாணவிகள் உறுதி மொழி ஏற்றனர்.  

இதனைத் தொடர்ந்து உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டம் மூலமாக மாவட்டம் முழுவதும் காசநோய் மற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், இலவச காசநோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்வதற்காகவும் வழங்கப்பட்டுள்ள 2 அதி நவீன நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனங்களையும் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து உலக மக்கள் தொகை தினத்தை வலியுறுத்தி செவிலியர் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியையும் கலெக்டர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் இளங்கோவன், காசநோய் பிரிவு துணை இயக்குனர் லட்சுமி முரளி, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: