சினிமா பாணியில் சாகசம் டாடா சுமோவில் 3 வாலிபர்கள் ஆபத்தான முறையில் பயணம்: வீடியோ வைரல்; போலீசார் விசாரணை

சென்னை: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் டாடா சுமோவில் ஆபத்தான முறையில் பயணம் செய்த வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் அதிவேகமாக சென்ற டாடா சுமோ மீது ஆபத்தான முறையில் அமர்ந்தும், நின்று கொண்டும் 3 வாலிபர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதில், இரண்டு வாலிபர்கள் சுமோவில் பக்கவாட்டில் கம்பியை பிடித்து நின்று கொண்டும், மற்றொரு வாலிபர் பேனட் மீது கால் மேல் கால் போட்டு சினிமா பாணியில் அமர்ந்து கொண்டு அதிவேகமாக செல்லும் வகையில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமோவில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த வாலிபர்களை தேடி வருகின்றனர். இதுபோல் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சாகசங்களை திருவள்ளூர் பகுதிகளில் ஒருசில வாலிபர்கள் கார், பைக் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இதை உடனடியாக போலீசார் தடுத்து நிறுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த ஆபத்தான சாகசங்களால் ஒருசில நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Related Stories: