×

நீண்ட நேரம் மூடப்பட்ட ரயில்வே கேட் பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டம்: பெருங்களத்தூரில் பரபரப்பு

தாம்பரம்: தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை ஆகிய பகுதிகளில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதில், பெருங்களத்தூர் பகுதியில் இருந்து பீர்க்கன்காரணை பகுதியில் உள்ள காவல் நிலையம், அரசு மருத்துவமனை, அரசு பள்ளி, மயானம், ஜிஎஸ்டி சாலை, பெருங்களத்தூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்பவர்கள், பீர்க்கன்காரணை பகுதியில் இருந்து பெருங்களத்தூர் பகுதியில் உள்ள கோயில், மார்க்கெட் பகுதிகளுக்கு செல்பவர்கள் என அனைவரும் பெருங்களத்தூர் ரயில் நிலைத்தில் எல்சி 32, 33 என இரண்டு ரயில்வே கேட் வழியாகத்தான் செல்கின்றனர்.

இந்நிலையில், ரயில்கள் வரும் நேரங்களில், கேட் மூடப்பட்டு இருப்பதால், அதையும் மீறி வேலைக்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் சிலர் ரயில்வே கேட்டை கடந்து செல்லும்போது, அவ்வழியாக வரும் ரயில்களில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வந்தது. இதனால், அப்பகுதியில் நடைமேம்பாலம் அமைக்கவேண்டும் என பொதுமக்களின் தொடர் கோரிக்கையையடுத்து எல்சி 32 கடவுப்பாதையில் கடந்த 2015 ஜூலையில் புதிய நடைமேம்பாலம் கட்டுவதற்கு முடிவுசெய்து எல்சி 32 கடவுப்பாதை நிரந்தரமாக மூடப்பட்டது.

இதனால், அருகில் உள்ள எல்சி 33 ரயில்வே கடவுப்பாதை வழியாக மட்டுமே தினமும் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். இவ்வாறு ஒரே கடவுப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வருவதால் அப்பகுதியில் எந்த நேரமும் கூட்ட நெரிசலாக காணப்படுகின்றது. மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகப்படியான கூட்டநெரிசல் ஏற்படும் நேரங்களில் தென்மாவட்டங்களில் இருந்து வரும் விரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள் வரும் நேரங்களில் ரயில்வே கேட் மூடப்படுகிறது. இவ்வாறு மூடப்படும் ரயில்வே கேட் சுமார் 20 முதல் 35 நிமிடங்கள் கழித்துதான் திறக்கப்படுகிறது.

இதனால் கடவுப்பாதையின் இரு புறங்களிலும், போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்துக்கிடக்கும் சூழ்நிலை உள்ளது.அவ்வாறு நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில்வே கேட் திறக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பெருங்களத்தூர் ரயில்வே கேட்டில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்சார ரயில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் பெருங்களத்தூரில் நிறுத்தப்பட்டது. தாம்பரம் - விழுப்புரம் ரயில் இரும்புலியூரில் நிறுத்தப்பட்டது. இதைப்போல் 3 பாதைகளிலும் ரயில்கள் நின்றதால், சென்னை எழும்பூரிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் பீர்க்கன்காரணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமரசம் பேசி ரயில்வே கேட்டை திறக்க நடவடிக்கை எடுத்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : Railway gate closed for a long time, public rail strike: Perungalathur stirs
× RELATED கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் பூசாரி...