×

திருப்போரூர் - தாம்பரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் - தாம்பரம் இடையே கூடுதல் பேருந்துகளை இயக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூரில் இருந்து தாம்பரத்திற்கு கூடுவாஞ்சேரி, கல்வாய், நெல்லிக்குப்பம், காட்டூர், இள்ளலூர் வழியாக 555என் என்ற பேருந்தும், இள்ளலூர், வெண்பேடு, காயார், பனங்காட்டுப்பாக்கம், கொளத்தூர், மாம்பாக்கம் வழியாக 555எம் என்ற பேருந்தும் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டதால் இதே வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் இயக்கப்பட்டு வந்த நகரப் பேருந்துகள் நிறுத்தப்பட்டு வந்தன.  

இதன் காரணமாக பள்ளி, கல்லூரி நேரங்களிலும், பொதுமக்கள் வேலை நேரத்தில் வீடு திரும்பும் நேரத்திலும் போதிய பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். பனங்காட்டுப்பாக்கம், கொளத்தூர், புங்கேரி போன்ற கிராமங்களில் இருந்து 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்க மாம்பாக்கம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரத்தில் இந்த மாநகர பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்கள் ஷேர் ஆட்டோக்களிலும், வேன்களிலும் பயணம் செய்கின்றனர்.

மேலும் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் ஏராளமான கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் வேலை பார்க்கும் ஆண்கள், பெண்கள் இந்த வழித்தட பேருந்துகளையே நம்பி உள்ளனர். அதேபோன்று காட்டூர், நெல்லிக்குப்பம், அகரம், கல்வாய், குமிழி, ஒத்திவாக்கம் கிராமமக்கள் கூடுவாஞ்சேரி, தாம்பரம், ஊரப்பாக்கம், வண்டலூர் பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்திற்கோ, படிக்கும் கல்லூரிகளுக்கோ செல்கின்றனர். ஆகவே, காலை மற்றும் மாலை வேளைகளில் இந்த இரு வழித்தடங்களிலும் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : Tirupporur ,Thirupporur , Request to operate additional buses between Tiruporur - Tambaram
× RELATED கார் மோதி கல்லூரி பேராசிரியர் பலி