×

சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1.35 லட்சம் அபராதம்; அதிகாரிகள் அதிரடி

சென்னை: மாநகராட்சி பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை சரியாக மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1.35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் மாநகரில் சுற்றுச்சூழலை பேணிகாக்கவும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகவும் 738 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 571 பூங்காக்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் பராமரிப்பிலுள்ள பூங்காக்களில் ஒப்பந்ததாரர்கள் புல்வெளிகளை வெட்டி பராமரித்தல், தேவையான நேரத்தில் புல்வெளிகளுக்கிடையேயான களைகளை அகற்றுதல், நடைபாதை மற்றும் செடி, கொடிகளை சரியாக பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி தேவையான எண்ணிக்கையில் தகுதியுடைய பணியாளர்களை நியமித்தல், பார்வையாளர்கள் புகார்களை தெரிவிக்க ஒவ்வொரு பூங்காவிலும் புகார் பதிவேடு மற்றும் பூங்காவின் நுழைவாயிலில் பார்வை நேரம், பணியாளர்களின் எண்ணிக்கை அடங்கிய விவரங்கள் காட்சிப்படுத்தி இருக்க வேண்டும்.  பூங்கா பராமரிப்பு பணிகளில் காவலர், தூய்மை பணியாளர் மற்றும் தோட்ட பராமரிப்பாளர் போன்ற ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையை விட குறைவான அளவில் பணியாளர்கள் இருந்தால் ரூ.500 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் பணியாளர் பற்றாக்குறை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பூங்கா பராமரிப்பு ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

பூங்காவை சரிவர சுத்தம் செய்யாவிடில் நாளொன்றுக்கு ரூ.600ம், கழிவறை பகுதிகளை சரிவர சுத்தரம் செய்யாவிட்டால் நாளொன்றுக்கு ரூ.2000ம் அபராதமாக விதிக்கப்படுகிறது. பூங்காவில் உள்ள மரம், செடி, கொடி மற்றும் புல்தரைகளை பராமரிப்பதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் 4000 சதுர அடி வரையிலான பூங்காக்களில் ரூ.2,500ம், 4000 சதுர அடிக்கு மேலான பூங்காக்களில் ரூ.15,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், பூங்காத்துறையின் சார்பில் கடந்த மாதம் 14ம்தேதி முதல் இந்த மாதம் 7ம்தேதி வரை மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் மேற்குறிப்பிட்ட பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ.1,35,590 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஒப்பந்தத்தில் தெரிவித்துள்ள எண்ணிக்கையின்படி பணியாளர்கள் இல்லாத காரணத்திற்காக 18 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.28,090, பராமரிப்பு பணிகளில் உள்ள குறைபாடுகளுக்காக 69 ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.1,07,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


Tags : Chennai Municipal Parks , Rs 1.35 lakh fine for contractors who do not carry out maintenance work properly in Chennai Municipal Parks; Officials take action
× RELATED மாண்டஸ் புயல் காரணாமாக சென்னை...