×

‘சென்னை பஸ் ஆப்’ மூலம் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும்; அதிகாரிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல்

சென்னை: சென்னை பஸ் ஆப் மூலம் போக்குவரத்து இயக்கத்தினை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தியுள்ளார். நுண்ணறிவு போக்குவரத்து  மேலாண்மை அமைப்பில் மேம்படுத்தப்பட்ட நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயங்கும் இடத்தை பொதுமக்கள் அறிந்திட ஏதுவாக, ‘சென்னை பஸ்’ செயலியை  கடந்த மே மாதம் 4ம் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

இந்த  செயலியானது, அனைத்து சென்னை மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு, பொதுமக்களுக்கு பயன்படும்படி,  பேருந்துகள் வருகை நேரம், வந்துகொண்டிருக்கும் இடம் ஆகியவற்றை  கைபேசியில் அறிந்து கொள்வதோடு, இருப்பிடத்திலிருந்து பயண திட்டத்தை வகுத்துக் கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது. மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 3,454 பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு,  சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள அண்டை மாவட்டங்களுக்கு 602 வழித்தடங்களில், 6,026 பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்லும் வகையில், 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்தநிலையில், மாநகர் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் நேற்று, ‘சென்னை பஸ்’ செயலி மூலம் பெறப்படும் தரவுகளை கொண்டு மாநகர் போக்குவரத்துக் கழக நிர்வாகத்திற்கு தேவைப்படும் அறிக்கைகளை தயார் செய்தல், அதன் அம்சங்களை மேம்படுத்தி சீரான போக்குவரத்து வசதியினை வழங்குதல் குறித்து  போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆய்வு கூட்டம்  நடைபெற்றது.

கூட்டத்தில், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம்,  பொது மேலாளர்கள், மண்டல மேலாளர்கள், உதவி மேலாளர்கள் மற்றும் கிளை  மேலாளர்கள்  சென்னை பஸ் செயலியை உருவாக்கிய நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு செயலியை மேம்படுத்துவது குறித்த தொழில்நுட்ப அம்சங்களை எடுத்துரைத்தனர்.  அதனைத் தொடர்ந்து,  அமைச்சர் சிவசங்கர் ‘சென்னை பஸ்’ செயலியின் தரவுகளை பயன்படுத்தி போக்குவரத்து இயக்கத்தினை மேம்படுத்திட தேவையான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags : Minister ,Sivashankar , Improve transportation through 'Chennai Bus App'; Minister Sivashankar's instruction to officers
× RELATED வெயிலில் இருந்து போக்குவரத்து...