44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடு பணி கிழக்கு கடற்கரை சாலையை சீரமைக்க வேண்டும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெளிநாட்டு வீரர்கள் வருவதால், கிழக்கு கடற்கரை சாலையை முற்றிலும் சீரமைக்க அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மேலும் இப்பணியை விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச சதுரங்கப் போட்டி வருகிற 28ம் தேதி முதல் அடுத்த மாதம்  10ம் தேதி  வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில், 187 நாடுகளைச் சேர்ந்த  2000க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டிற்கு  வருகை தரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வரவேற்க ஏற்பாடுகள் தமிழக அரசின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.   வெளிநாடுகளில் இருந்து வருகின்ற வீரர்கள், பத்திரிகையாளர்கள்,  ஊடகவியலாளர்கள், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பினர் மற்றும் விருந்தினர்கள்  தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய நட்சத்திர விடுதிகளில் 2,000 அறைகள்  மற்றும் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள், உயர் அலுவலர்கள் அடங்கிய  ஒருங்கிணைப்புக் குழு  அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் அடங்கிய பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் நேற்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ள மாமல்லபுரம்,  பூஞ்சேரி கிராமத்தில், போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி  வளாகத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக  சிறப்பு ஆய்வு கூட்டம் நடந்தது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்களுடன் ஒருங்கிணைந்து, மாவட்டங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, இச்செஸ் போட்டி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைத்து விளையாட்டு வீரர்களுக்கும், அமைப்பாளர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக வழங்கிட வேண்டும். இச்சதுரங்க விளையாட்டு போட்டிகளை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் போட்டி நடைபெறும் அரங்குகளில் டிஜிட்டல் போர்டுகளை வைத்திட வேண்டும். விளையாட்டு போட்டி நடைபெறவுள்ள அரங்குகளின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.    

மேலும், பூஞ்சேரி கிராமத்தில், போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில், 52,000 சதுர அடியில் சதுரங்க விளையாட்டு வீரர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டு வருகின்ற நவீன உள் விளையாட்டரங்கம்,  ஏற்கனவே அப்பகுதியில் உள்ள 22,000 சதுர அடியிலான அரங்கத்தினை விளையாட்டரங்கமாக மேம்படுத்தும் பணி, வாகனங்கள் நிறுத்துமிடம், சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருவது குறித்தும், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விளையாட்டு  வீரர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சிவ.வீ. மெய்யநாதன், மா.மதிவேந்தன், ஆ.ராசா எம்பி,  உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் அசோக் சிகாமணி,  தலைமை செயலாளர் வெ.இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தனம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, செஸ் ஒலிம்பியாட் சிறப்பு அலுவலர் டாக்டர் தாரேஸ் அகமது, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் சஞ்சய் கபூர், செயலாளர் பரத் சிங் சவுகான், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் சதுரங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் பல இடங்களில் சாலைகள் குறுகலாகவும், ஆக்கிரமிப்புகளுடனும் உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்களும், அதிகாரிகளும் வருவதால் கிழக்கு கடற்கரை சாலையை சீரமைக்கவும், தரம் உயர்த்தவும், பெரிய சாலைகளாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இது குறித்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதிகாரிகளுக்கு முதல்வர் உரிய உத்தரவுகளை பிறப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

Related Stories: