×

கொடநாடு கொலை வழக்கில் 3வது முறையாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் விசாரணை; மேலும் சிலரிடம் விசாரிக்க முடிவு

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியிடம் தனிப்படை போலீசார் 3வது முறையாக விசாரணை நடத்தினர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான் மற்றும் மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை மீண்டும் நடந்து வருகிறது. அதன்படி சசிகலா உள்பட 230க்கும் மேற்பட்டவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார், மணல் சப்ளையர் ஓ.ஆறுமுகசாமி மற்றும் அவரது மகன் செந்தில்குமாரிடம் சில தினங்களுக்கு முன்பு விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவல்கள் அடிப்படையில் சென்னையை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் நேற்று விசாரணை நடந்தது. காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை போலீஸ் ஐஜி சுதாகர் தலைமையில் போலீசார் விசாரித்தனர். வாகன விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், ஆறுக்குட்டியிடமும் டிரைவராக இருந்தார்.

அப்போது அவர் பலமுறை ஆறுகுட்டியிடம் செல்போனில் பேசியுள்ளார். அதன் அடிப்படையிலும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காணாமல் போன ஆவணங்கள் குறித்தும் போலீசார் ஆறுக்குட்டியிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை கேட்டனர். கடந்த ஏப்ரல் 15ம் தேதி ஆறுக்குட்டியிடமும், 17ம் தேதி அவரது மகன் அசோக்பாபுவிடமும் தனிப்படை போலீசார் கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியிருந்தனர். தற்போது ஆறுக்குட்டியிடம் 3வது முறையாக விசாரணை நடைபெற்றுள்ளது. அதன் அடிப்படையில் அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் கொடநாடு தொடர்பாக அடுத்தகட்டமாக விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : AIADMK ,MLA ,Arukutty ,Koda Nadu , AIADMK ex-MLA Arukutty questioned for 3rd time in Koda Nadu murder case; Decided to ask a few more
× RELATED டிடிவி, ஓபிஎஸ் டெபாசிட் வாங்குவதே பெரிய விஷயம்: அதிமுக எம்எல்ஏ பளீர்