பணியின் போது உயிர் இழக்கும் ஊழியர்களின் குடும்ப நிலையைப் பொறுத்து கருணை அடிப்படையில் பணி; ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: பணியின் போது இறக்கும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தகுதிக்கு ஏற்ப, குடும்ப நிலையை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் பணி ஒதுக்கீடு வழங்குவதற்கான திருத்தப்பட்ட கொள்கையை ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஒன்றிய உள்துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் பணியின் போது, உயிரிழக்கும் பட்சத்தில், அவர்களின் குடும்பத்தின் எதிர்காலம் கருதி, வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது.

இதில் பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின் திருத்தப்பட்ட புதிய கொள்கைகளை ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. இந்த திருத்தப்பட்ட கொள்கையில், கருணை அடிப்படையில் பணி வழங்குவதில் பணியாளர் நலத்துறை அதிகாரிகளின் பங்கு, விண்ணப்பங்களை மதிப்பிடுதல், ஒவ்வொரு விண்ணப்பத்தையும் தனிப்பட்ட அடையாளத்துடன் அட்டவணைப்படுத்துவது மற்றும் ஆய்வுக்குழு அமைத்து தகுதிக்கு ஏற்ப பணி வழங்குவது உள்ள பல்வேறு வழிகாட்டுதல்கள் இடம் பெற்றுள்ளன.

* கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற, இறந்த அரசு ஊழியரின் குடும்பத்திற்கு பணியாளர் நலத்துறை அதிகாரி உதவ வேண்டும்.

* விண்ணப்பதாரரை நேரில் அழைத்து, அவரின் குடும்பத்திற்கான தேவையை கேட்டறிந்து, பிற வழக்கமான நடைமுறைகளை செய்ய வேண்டும்.

* அவரது விண்ணப்பத்தை அமைச்சகத்தின் இயக்குநர் அல்லது துணை செயலாளர் பொறுப்பில் உள்ள 3 உயர் அதிகாரிகள் கொண்டு பரிசீலிக்க வேண்டும்.

* அக்குழு குடும்பத்தின் மொத்த வருமானம், பணி நியமனம் கோரும் வாரிசை சார்ந்து குடும்பத்தில் உள்ள குழந்தைகள், அவர்களில் யாராவது மாற்றுத் திறனாளிகளா, திருமணமாகாத சகோதரிகள் எத்தனை பேர் உள்ளிட்ட விவகாரங்களை ஆராய்ந்து, அதற்கேற்ப தகுதியின் அடிப்படையில் போதுமான சம்பளத்துடன் கூடிய பணியை வழங்க வேண்டும்.

இவ்வாறு திருத்தப்பட்ட கொள்கையில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்கள் கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் அதிக வெளிப்படைத் தன்மையையும் தரத்தையும் கொண்டு வரும் என உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறி உள்ளனர். மேலும், இத்துறையின் கீழ் உள்ள துணை ராணுவப் படையில், உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்திற்கும் அதிக நன்மை கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: