×

சிம்சன் அருகே பைக்கில் வந்த பித்தளை வியாபாரிகளிடம் ரூ.1.27 கோடி பணம் பறிமுதல்; ஹவாலா பணமா என 2 பேரிடம் போலீஸ், ஐடி அதிகாரிகள் விசாரணை

சென்னை: அண்ணாசாலை சிம்சன் அருகே பைக்கில் வந்த 2 பித்தளை வியாபாரிகளிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1.27 கோடி பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி மாநகரம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருவல்லிக்கேணி போக்குவரத்து காவலர் ஜெகன் அண்ணாசாலை சிம்சன் சந்திப்புக்கு இடையே உள்ள பெரியார் சிலை அருகே நேற்று காலை போக்குவரத்து பணியில் இருந்தார். அப்போது, சிவானந்தா சாலையில் இருந்து பாரிமுனை நோக்கி வேகமாக வந்த பைக் ஒன்று வந்தது. சிக்னல் உள்பட போக்குவரத்து விதிகளை மீறியபடி பாரிமுனை நோக்கி செல்ல முயன்றனர்.

இதை கவனித்த காவலர் ஜெகன் பைக் ஓட்டிவந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசார் அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தார். அதில், ரூ.1.27 கோடி பணம் கட்டுகட்டாக இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே சம்பவம் குறித்து போக்குவரத்து இணை கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனர் குமார், திருவல்லிக்கேணி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் மோகன் ராஜிக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி விரைந்து வந்த உயர் அதிகாரிகள் பணத்தை கொண்டு வந்த 2 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அதில், ராயப்பேட்டை முத்தையா 2வது தெருவை சேர்ந்த முத்தையா(43), அதே பகுதியை சேர்ந்த ராஜா(41) என தெரியவந்தது.  

இவர்கள் இருவரும் பித்தளை வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. பணத்திற்கான எந்த ஆதாரங்களும் இவர்களிடம் இல்லை. ஆனால், இருவரும் பார்க் டவுன் மின்ட் தெரு முத்துசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தை வாங்குவதற்காக முன் தொகையாக செலுத்த பணத்தை கொண்டு சென்றதாக தெரிவித்தனர். பின்னர் பிடிபட்ட முத்தையா மற்றும் ராஜாவிடம் பணத்திற்கான சரியான எந்த ஆவணங்களும் இல்லாததால், இது ஹவாலா பணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே பிடிப்பட்ட 2 பேரிடம் ரூ.1.27 கோடி பணம் குறித்து தொடர்ந்து போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம், போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். அதன்படி வருமான வரித்துறை அதிகாரி பாலசந்திரன் தலைமையிலான குழு திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு வந்து பணத்தை முழுமையாக எண்ணி பார்த்தபோது, 1,308 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், 20,268 ரூ.500 ரூபாய் நோட்டுக்கள் என மொத்தம் ரூ.1.27 கோடி பணம் இருந்தது தெரியவந்தது.  பிறகு பணத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறை அதிகாரிகள் பிடிபட்ட 2 பேரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று பணம் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Simpson , Rs 1.27 crore cash seized from bike dealers near Simpson; Police and IT officials interrogate 2 people for hawala money
× RELATED யூனியன் அலுவலகத்தில் ஓஏ வேலை வாங்கி...