×

`ஆட்டத்தின் செயல்திறனைவிட தரம் நிரந்தரமானது’ விராட் கோஹ்லிக்கு கால அவகாசம் கொடுக்கவேண்டும்: கவாஸ்கர் அறிவுறுத்தல்

மும்பை:விராட் கோஹ்லிக்கு இன்னும் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று மாஜி வீரர் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட்கோஹ்லி இங்கிலாந்துக்கு எதிராக தற்போது நடந்த டி20 போட்டிகளில் 1 மற்றும் 11 ரன்கள் எடுத்தார். இதையடுத்து பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கோஹ்லியை அணியை விட்டு நீக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சனம் செய்தனர். குறிப்பாக கபில்தேவ் கோஹ்லியை நீக்கிவிட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் கவாஸ்கர் கோஹ்லிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘ரோஹித் ஷர்மா அல்லது வேறு எந்த ஒரு பேட்ஸ்மேனும் ரன் எடுக்கத் தவறும்போது யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். ரோஹித் ஷர்மா ரன் எடுக்காதபோது அதைப் பற்றி ஏன் பேசுவதில்லை என்பது எனக்குப் புரியவில்லை. அதுபோல் நல்ல பார்மில் இருந்த வேறு சில வீரர்கள் திடீரென்று தடுமாறும்போது அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆட்டத்தின் செயல்திறன் (பார்ம்) தற்காலிகமானது. ஆனால் ஆட்டத்தின் தரம் நிரந்தரமானது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே கோஹ்லி தாக்குதல் ஆட்டத்தை ஆடினார். ஆனால் சூழ்நிலைக்கேற்ப ஆடும் ஆட்டத்தை அவர் தவறவிட்டார். கோஹ்லி வெளியே சென்று பேட்டை ஸ்விங் செய்ய வேண்டிய யுக்தியை பயன்படுத்துகிறார். இதில் சில சமயங்களில் அவர் தோல்வியடைகிறார். தேர்வுக்குழு இதுபற்றி சிந்திக்கும். 2022 டி20 உலகக் கோப்பை அணியை தேர்வு செய்ய இன்னும் காலம் இருக்கிறது. எனவே கோஹ்லிக்கு அணி நிர்வாகம் இன்னும் கால அவகாசம் வழங்க வேண்டும்’’ என்றார்.

Tags : Virat Kohli ,Gavaskar , Performance in the game, Virat Kohli should be given time: Gavaskar advises
× RELATED நரேந்திர மோடி மைதானத்தில்...