×

இலங்கையில் போராடும் மக்களுக்கு பயந்து ராஜபக்சே சகோதரர் வெளிநாடு தப்பியோட முயற்சி: ஏர்போர்ட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிர்ச்சி

கொழும்பு: இலங்கை மக்களுக்கு பயந்து மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே வெளிநாடு தப்பியோட முயற்சி செய்த நிலையில், அவருக்கு ஏர்போர்ட்டில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் திரும்பினார்.இலங்கை மக்களின் போராட்டத்தின் உச்சகட்ட விளைவாக பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கேவும் சமீபத்திய ஆக்ரோஷ போராட்டத்தால் பதவி விலகினார்.

அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி, அதிபர் மாளிகையை கைப்பற்றி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக கூறப்பட்டாலும், அவர் எங்கு உள்ளார்? என்பது கேள்வியாக உள்ளது. இந்த நிலையில், இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும், இலங்கையின் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சே, வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றார்.

அதற்காக நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடும்பத்தினருடன் வந்தார். அப்போது அங்கிருந்த பயணிகளில் சிலர், பசில் ராஜபக்சேவை வெளிநாடு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றும், அவர்களது உடைமைகளையும் ஆவணங்களையும் பரிசோதிக்கக் கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் விமான நிலைய முனையத்தின் அதிகாரிகள், பசில் ராஜபக்சேவையும் அவரது குடும்பத்தினரையும் சோதனையிட மறுத்தனர். மேலும், அதிகாரிகள் அவர்களிடம் இருந்து விலகிச் சென்றனர். அதிர்ச்சியடைந்த பசில் ராஜபக்சே மற்றும் குடும்பத்தினர் வேறு வழியின்றி திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

துபாய் விமான சேவை ரத்து
துபாய் மற்றும் கொழும்பு விமான நிலையத்திற்கு இடையிலான ‘ப்ளைதுபாய்’ விமானங்கள் கடந்த 10ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். அதனால் மறு அறிவிப்பு வரும் வரை இலங்கைக்கு விமான சேவை நிறுத்தப்படுகிறது.  எங்கள் விமானங்களில் பயணம் செய்ய  முன்பதிவு செய்த பயணிகளின் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும். பயண அட்டவணையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார்.

Tags : Rajapakse ,Sri Lanka , Sri Lanka, struggling, Rajapakse brother, airport,
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...