×

கர்நாடக அணைகளில் உபரிநீர் திறப்பு ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடி ஆனது

மேட்டூர்: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் பெய்யும் கனமழையால், கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி நேற்று மாலை முதல் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 78,000 கனஅடி வீதமும், கபினி அணையில் இருந்து 38,000 கனஅடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இரு அணைகளிலிருந்தும் விநாடிக்கு 1.16 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர், தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு பெருக்கெடுத்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 18,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, பிற்பகல் 3 மணிக்கு 28,000 கனஅடியாகவும், மாலை 4 மணிக்கு 35,000 கனஅடியாகவும், 5 மணிக்கு 43,000 கனஅடியாகவும் அதிகரித்தது. மாலை 6 மணியளவில் விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது.

இது இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மெயின்அருவி, ஐவர்பாணி, சினிபால்ஸ் உள்ளிட்ட இடங்களில் பாறைகளை மூழ்கடித்தவாறு புதுவெள்ளம் பொங்கி பாய்கிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் இன்று 3வது நாளாக தடை நீடிக்கிறது.

கடந்த ஒரு மாத காலமாக காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2500 கனஅடிக்கு கீழ் சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருந்ததால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி 100 அடியாக இருந்த  அணையின் நீர்மட்டம் 257 நாட்களுக்குப்பிறகு கடந்த 8ம் தேதி 100 அடிக்கு கீழே சரிந்தது. தற்போது கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டு வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

நேற்று காலை 8,010 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் 18,000 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி 50,576 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரித் துள்ளதால் அணை நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. அணையின் வரலாற்றில் 68வது ஆண்டாக நான்கு நாட்களுக்குப்பிறகு இன்று அதிகாலை நீர்மட்டம் மீண்டும் 100 அடியாக உயர்ந்தது. நேற்று 98.20 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணியளவில் 100.44 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் நீர்மட்டம் 2.24 அடி உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 65.41 டி.எம்.சியாக உள்ளது. இன்று மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,00,000 கன அடி வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Karnataka ,Ogenakal ,Mattur Dam , Karnataka Dam, Spillway, Okanagan, Mettur Dam,
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!