×

தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து ரவுடிகள் உதவியுடன் ஆவணங்கள் கொள்ளையடித்த ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து ரவுடிகள் உதவியுடன் ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து சென்ற ஓ.பன்னீர்செலவம் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் எடப்பாடி ஆதரவாளரான அதிமுக தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் அதிமுக தலைமை அமைந்துள்ள தென் சென்னை (வடக்கு, கிழக்கு) பகுதியின் மாவட்ட செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறேன். எங்கள் கட்சியின் தலைமை அலுவலகம் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கட்சியினுடைய பொதுக்குழு கூட்டம் நடத்த சொல்லி பொதுக்குழுவின் 80 சதவிகிதம் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ேநற்று காலை சென்னை வானகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பொதுக்குழு நடத்த எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. காலை 9 மணிக்கு தலைமை அலுவலகத்தை சில சமூக விரோதிகள் தாக்க முற்படப்போவதாக கேள்விபட்டு கடந்த 8ம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சென்னை காவல் துறை ஆணையர் மற்றும் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

பொதுக்குழு நடத்துவதற்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு வந்த நிலையில் தலைமை அலுவலகத்தை தாக்க போவதாக கேள்விப்பட்டு அங்கு விரைந்து சென்று பார்த்த போது, ஓ.பன்னீர்செல்வம் எம்எல்ஏ வெள்ளை நிற வேனின் முன் பக்கம் அமர்ந்து கொண்டு, அவர் வாகனத்தின் முன் சுமார் 300 பேர் பெயர் தெரியாத பார்த்தால் அடையாளம் காட்டகூடிய ரவுடிகள் மற்றும் குண்டர்கள் கையில் கத்தி, கடப்பாரை, தடி, உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களுடன் பெரிய கற்களை வீசி கொண்டே தலைமை அலுவலகம் நோக்கி சென்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் வாகனத்தில் வைத்திலிங்கம் எம்எல்ஏ, ஜெசிடி.பிரபாகர், மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ, புகழேந்தி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உடன் இருந்தனர்.  ஓ.பன்னீர்செல்வம் மைக்கில் ‘யாராயிருந்தாலும் வெட்டுங்கள், அடித்து உதையுங்கள்’ என்று சொல்ல மேற்படி ரவுடிகள் ரோட்டில் நின்று கொண்டிருந்த அதிமுக தொண்டர்கள், பொது மக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். தலைமை அலுவலகத்திற்கு வந்த அவர்கள், அலுவலகம் பூட்டப்பட்டு இருப்பதை பார்த்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் ‘டே கேட்டை அடித்து உடையுங்கள்’ என்று சொன்னவுடன் அவருடன் வந்த குண்டர்கள் கடப்பாரை கொண்டு பூட்டை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர்.

பின்னர் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அனைத்தையும் கொள்ளையடித்து அவர் வந்த வேனில் வைத்தனர். அதை அனைத்து ஊடகங்கள் முன்பாக இந்த கொலை வெறி தாக்குதல் மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது.எனவே அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற திட்டமிட்ட இந்த கொலை வெறி தாக்குதல் மற்றும் கொள்ளையடித்து சென்ற ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜெசிடி.பிரபாகர், மனோஜ்பாண்டியன், புகழேந்தி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவர்களுடன் வந்த அடியாட்கள், ரவுடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஓ.பன்னீர்செல்வம் வேனில் எடுத்து சென்ற அனைத்து ஆவணங்கள் மற்றும் பொருட்களையும் மீட்டு தருமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : OPS ,Roudees , Head office, theft of documents, action on OPS,
× RELATED சொத்து குவிப்பு வழக்குகளிலிருந்து...