ஆத்தூர் அருகே தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை

ஆத்தூர்: தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி பழையக்காயல் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே கோவங்காடு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் (42). விவசாயி. இவரது மாமனாரும், விவசாயியுமான ராஜாமணி (57) என்பவர் கடந்த ஜூன் 26ம் தேதி இரவு 10 மணிக்கு பழையக்காயலில் உள்ள வாழைத் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது திடீரென மாயமானார். இதனால் பதறிய குடும்பத்தினர் நண்பர்கள், உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு  இடங்களில் தேடிப் பார்த்தும் அவரை பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் சாயர்புரம் போலீசார் வழக்குப் பதிந்து மாயமான ராஜாமணியைத் தேடி வந்தனர்.

 இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த மாசானமுத்துவின் மகன் யோகராஜ் என்பவர், பழையகாயலில் உள்ள தனது தோட்டத்திற்கு நேற்று நண்பகல் 12 மணிக்கு சென்றபோது அங்குள்ள வரப்பில் அழுகிய நிலையில் ராஜாமணி சடலமாகக் கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், ஆத்தூர் போலீடுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் செந்தில், எஸ்ஐ மாணிக்கராஜ் மற்றும் போலீசார், ராஜாமணியின் உடலைக் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக கடந்த ஜூன் 26ம் தேதி வாழைத் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச பழையக்காயலுக்கு சென்ற போது வரப்பில் நிலை தடுமாறி கீழே விழுந்து  ராஜாமணி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: