×

தாய்லாந்து, மலேசியா, துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த 3 கிலோ தங்கம் பறிமுதல்: 4 பேர் கைது

மீனம்பாக்கம்: தாய்லாந்து, மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு ரூ.1.38 கோடி மதிப்புடைய 3.08 கிலோ தங்கத்தை உள்ளாடைகள் மற்றும் காலணிகளில் மறைத்து கடத்தி வந்த 4 பயணிகள் கைது செய்யப்பட்டனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து ஏர்ஏசியா ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று வந்தது. அதில் வந்த பயணிகளை, சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த ஷாகுல் அமீது (32), திருச்சியை சேர்ந்த ரஷீத் (28) ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி சோதனையிட்டனர்.

அதே நேரத்தில் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த அருண் பாண்டியன் (30) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். துபாயில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த பழனிச்சாமி (38) என்பவரையும் நிறுத்தி சோதனையிட்டனர்.

இந்த 4 பயணிகளிடம் இருந்து மொத்தம் 3.08 கிலோ தங்கப்பசை, தங்கங்கட்டிகளை பறிமுதல் செய்தனர். சர்வதேச மதிப்பு ரூ.1.38 கோடி. இந்த தங்கத்தை 4 பயணிகளும் உள்ளாடைகள் மற்றும் காலணிகளில் மறைத்து எடுத்து வந்தனர். 4 பேரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thailand ,Malaysia ,Dubai ,Chennai , Thailand, Malaysia, Dubai, gold seizure, arrest
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...