44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடு பணி கிழக்கு கடற்கரை சாலையை சீரமைக்க முடிவு: மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வெளிநாட்டு வீரர்கள் வருவதால், கிழக்கு கடற்கரை சாலையை முற்றிலும் சீரமைக்க அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். உலக நாடுகள் பங்கேற்க இருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி உலக புகழ்பெற்ற சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது.

இந்த போட்டியில் 188 நாடுகளில் இருந்து 2500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாட உள்ளனர். இந்த போட்டி இந்தாண்டு ரஷ்யா நாட்டில் நடைபெற இருந்தது. தற்போது உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் போர் நடந்து வருவதால், செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் முடிவை ரஷ்யா கைவிட்டது.  இதனால் பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த கடும் போட்டிபோட்டது.

இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் சுற்றுலா தலமான மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஃபோர் பாயிண்ட் நட்சத்திர ரிசார்ட்டில் போட்டியை நடத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த உலக நாடுகளின் கவனமும் தமிழகத்தின் மீது திரும்பியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற இருப்பதால் தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக  இந்த போட்டி அமையும் என கிரிக்கெட், கபடி, கைப்பந்து, கால்பந்து மற்றும் ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் தங்குவதற்காக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டல்கள், ரிசார்ட்கள் மற்றும் தங்கும் விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறைகள் 5 ஸ்டார் மற்றும் 4 ஸ்டார் வசதி கொண்டதாகும்.  குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி, இன்டர்நெட் வசதி, மருத்துவக்குழு, யோகா பயிற்சி உள்ளிட்ட வசதிகள்  ஏற்பாடு  செய்யப்பட்டு வருகிறது. போட்டி நடக்க உள்ள ஃபோர் பாயிண்ட் ரிசார்ட்டில் 52 ஆயிரம் சதுர அடியில் புதிய அரங்கம், பழைய அரங்கத்தில் அதிக வெளிச்சம் தரக்கூடிய எல்இடி மின் விளக்குகள் பொருத்தும் பணி, வாகன நிறுத்துமிடம், நவீன கழிப்பறை, தடையில்லா மின்சாரம், அலங்கார வளைவு, மீடியாக்களுக்காக தனிசாலை, மீடியா அறை, போட்டி நடக்கும் ரிசார்ட் முழுவதும் எல்இடி விளக்கு பொருத்தும் பணி, புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதுபோல்  வீரர்கள் வரும் வழியில் உள்ள குளம், குட்டைகள் சீரமைத்தல், மாமல்லபுரம் நகரம் முழுவதும் சாலைகள் பழுது பார்க்கும் பணி, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிப்பறை சீரமைப்பு, பழைய மின் விளக்குகளை கழற்றி புதிய மின் விளக்கு பொருத்துவது, மாமல்லபுரம் நுழைவு வாயில் ஸ்தூபி, சாலைகளின் இருபுறமும் பேவர் பிளாக் பதிக்கும் பணி, சுவர்களில் தமிழ் பாரம்பரிய கண்கவர் ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கண்ட பணிகளை அமைச்சர்கள், கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், சிறப்பு அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, நிலவரம் குறித்து அரசுக்கு தொடர் அறிக்கை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, அனைத்துதுறை கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள் கொண்ட குழுவினருடன்  செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நடந்து வரும் முன்னேற்பாடு பணிகளை நேரில் ஆய்வு செய்தார். பின்னர், வீரர்கள் அமர்ந்து விளையாட 52 ஆயிரம் சதுரடி பரப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் அரங்கம், 20 சதுர அடியில் ஏற்கனவே உள்ள பழைய அரங்கம், உணவு சாப்பிடும் கூடம், நவீன கழிப்பறை, வாகன நிறுத்துமிடம், ரிசார்ட் மற்றும் வீரர்கள் அமர்ந்து விளையாடும் அரங்கம் ஆகியவற்றின் மாதிரி வரைபடத்தை  பார்வையிட்டு முதல்வர் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, தமிழக அரசு மூலம் ஒலிம்பியாட் போட்டிக்காக நியமிக்கப்பட்ட 18 குழுக்களை சேர்ந்த அமைச்சர்கள், தலைமை செயலாளர், டிஜிபி, கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள், சிறப்பு அலுவலர்களுடன் பல்வேறு அடிப்படை பணி குறித்து ஆலோசனை நடத்தினார்.  இதில், அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் பல இடங்களில் சாலைகள் குறுகலாகவும், ஆக்கிரமிப்புகளுடனும் உள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்களும், அதிகாரிகளும் வருவதால் கிழக்கு கடற்கரை சாலையை சீரமைக்கவும், தரம் உயர்த்தவும், பெரிய சாலைகளாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதிகாரிகளுக்கு முதல்வர் உரிய உத்தரவுகளை பிறப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

Related Stories: