×

கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் புதிதாக உழவர் சந்தை அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு-பழைய இடத்திலேயே திறக்கக் கோரி கலெக்டரிடம் மனு

ஊட்டி :  கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உழவர் சந்தை அமைப்பதற்கு வியாபாரிகள் எதிரிப்பு தெரிவித்து வரும் நிலையில், பழைய இடத்திலேயே உழவர் சந்தையை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வியாபாரிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக பயன்பெறும் வகையில் திமுக., அரசு உழவர் சந்தைகளை அமைத்தது. பெரும்பாலான இடங்களில் இதற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்த நிலையில், மாவட்டம் தோறும் பல இடங்களில் உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டன.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டன. ஊட்டி மற்றும் குன்னூர் உழவர் சந்தை தற்போது இயங்கி வருகிறது. ஆனால், கோத்தகிரி உழவர் சந்தை கடந்த சில ஆண்டுகளாக இயங்காமல் உள்ளது. இந்நிலையில், மீண்டும் கோத்தகிரி பகுதியில் உழவர் சந்தை அமைக்க தற்போது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

புதிதாக கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உழவர் சந்தை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள சில கடைகள் அகற்றப்பட்டு, அப்பகுதியில் உழவர் சந்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், உழவர் சந்தை மார்க்கெட் பகுதிக்கு வந்தால், அங்குள்ள வியாபாரிகளுக்கு வியாபாரம் பாதிக்கும் என்பதால், தற்போது வியாபாரிகளிைடயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதுமட்டுமின்றி, பல ஆண்டுகளாக பல ஆயிரம் வரி செலுத்தி வரும் நிலையில், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நேற்று வியாபாரிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உழவர் சந்தை அமைக்க கூடாது. வேறு இடத்திற்கு உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு ஒன்றையும் அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

 கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் சுமார் 60 ஆண்டுகளாக 300க்கும் மேற்பட்ட கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். கோத்தகிரி பேரூராட்சிக்கு ஆண்டிற்கு ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி தருகிறோம். தற்போது மார்க்கெட்டின் ஒரு பகுதி கடைகளை அகற்றிவிட்டு உழவர் சந்தை அமைக்க மாவட்ட நிர்வாகமும், பேரூராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. தற்போது சுமார் 60 கடைகள் அகற்றி அப்பகுதியில் உழவர் சந்தை அமைப்பதாக தெரிகிறது.

இதனால், அந்த 60 குடும்பங்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கோத்தகிரியில் உழவர் சந்தை இருந்த இடத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால், அப்பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டதால், பெண்கள் செல்ல இடையூறாக இருக்கும் எனக் கருதி உழவர் சந்தை மூடப்பட்டது. மேலும், இந்த உழவர் சந்தை பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. புதிதாக உழவர் சந்தை கட்டினால், மீண்டும் அரசு பணம் விரயமாகும்.

 எனவே, ஏற்கனவே பஜார் பகுதியில் உள்ள உழவர் சந்தையை புதுப்பித்து செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்க்கெட் பகுதியில் உள்ள 60 கடை வைத்துள்ள வியாபாரிகள் மற்றும் அவர்களை சார்ந்துள்ள ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Tags : Kotagiri , Ooty: While the traders are opposing the establishment of farmers market in Kotagiri market area, the farmers are still in the old place.
× RELATED கோத்தகிரி சுற்றுவட்டாரங்களில் இதமான காலநிலை நிலவுகிறது