×

கோபி அருகே கணவருடன் கோபித்துக்கொண்டு மகனுடன் மாயமான பெண்ணை 2 ஆண்டுக்குபின் மீட்ட போலீசார்-ஆதார் எண்ணை வைத்து துப்பு துலக்கியதாக தகவல்

கோபி : கோபி அருகே கோட்டாம்பாளையத்தில் கணவருடன் கோபித்துக்கொண்டு, மகனுடன் மாயமான பெண்ணை ஆதார் எண்ணை வைத்து துப்புத்துலக்கி 2 ஆண்டுக்கு பின்னர் மீட்டு, நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.கோபி அருகே உள்ள கவுந்தப்பாடி  கோட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் மாதேஷ்வரன் (38). விசைத்தறி  தொழிலாளியான இவருக்கும் கூத்தம்பட்டியை சேர்ந்த மாது என்பவர் மகள்  கிருஷ்ணவேணி (29) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம்  நடைபெற்றது.

இவர்களுக்கு பூபேஸ் (12), விக்னேஸ்வரன் (9) என்ற இரண்டு  மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 7.7.2020 அன்று வீட்டில் இருந்த  கிருஷ்ணவேணியும், விக்னேஸ்வரனும் திடீரென மாயமானார்கள். இதுகுறித்து  மாதேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு  செய்து கிருஷ்ணவேணி மற்றும் விக்னேஷ்வரனை தீவிரமாக தேடி வந்தனர். கடந்த 2  ஆண்டுகளாக இவர்கள் குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத நிலையிலும் மனம் தளராத தனிப்படை  போலீசார், சிறுவன் விக்னேஸ்வரனின் ஆதார் எண்ணை வைத்து, ஏதாவது பள்ளியில்  சேர்க்கப்பட்டு உள்ளாரா? என்பது குறித்து துப்புத்துலக்கினர்.

அதனடிப்படையில்  சேலம் மாவட்டம் ராமலிங்கபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் இந்த ஆண்டு  விக்னேஷ்வரன் சேர்க்கப்பட்டது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அங்கு சென்று  போலீசார் நடத்திய விசாரணையில், அங்கு படித்த சிறுவன் கிருஷ்ணவேணியின் மகன்தான் என்பது உறுதியானது. கணவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவரைவிட்டு பிரிந்து  சென்றதாக கூறிய கிருஷ்ணவேணி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கூலி வேலை  செய்து வந்துள்ளார்.

கிருஷ்ணவேணியையும், விக்னேஷ்வரனையும் மீட்டு வந்த கவுந்தப்பாடி தனிப்படை போலீசார் இருவரையும்  கோபியில் உள்ள ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இரண்டு  ஆண்டுகளுக்கு முன் மாயமான தாய், மகனை ஆதார் எண் மற்றும் சிறுவன் பள்ளியில்  சேர்க்கப்பட்டதை வைத்து கண்டுபிடித்து மீட்டு வந்த கவுந்தப்பாடி போலீசாரை  பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags : Gobi , Gopi : Missing woman with son who was angry with her husband in Kotampalayam near Gopi was identified by Aadhaar number 2
× RELATED வாலிபர் தூக்கிட்டு சாவு