×

திருப்பத்தூர் அருகே மடவாளம் கிராமத்தில் 13ம் நூற்றாண்டு போசள அரசர் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு-வரலாற்று எச்சங்களை பாதுகாக்க கோரிக்கை

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் அருகே மடவாளம் கிராமத்தில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த போசள அரசர் காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ஆ.பிரபு மற்றும் சமூக ஆர்வலர் வே.ராதாகிருஷ்ணன், ஆய்வு மாணவர் பொ.சரவணன் ஆகியோர் திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் கள ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மடவாளம் கிராமத்தில் கல்வெட்டு ஒன்றைக் கண்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர்.இதுகுறித்து உதவிப்பேராசிரியர் ஆ.பிரபு கூறியதாவது:

திருப்பத்தூரில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மடவாளம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டோம். இப்பகுதியில் எங்கள் குழுவினர் ஏற்கனவே சோழர்களின் குல தெய்வ சிலை, மூத்த தேவி சிற்பம், தலைப்பலி நடுகற்கள் ஆகிவற்றைக் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இவ்வூரில் உள்ள ஏரியின் கீழ்ப்புறம் உள்ள வயல் வெளியில் ஒரு சிறிய பாறை இருப்பதைக் கண்டு அங்கு ஆய்வு மேற்கொண்டோம்.

இயற்கையாக அமைந்த அப்பாறையின் முகப்பில் 10க்கும் மேற்பட்ட தமிழ் எழுத்து வரிகளைக் கொண்ட பழமையான கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்து, தொடர்ந்து அக்கல்வெட்டைச் சுத்தம் செய்து மாவுப்பூச்சு வாயிலாகப் படியெடுத்து வாசிக்க முற்பட்டோம். போதிய பாதுகாப்பின்றி புதர் மண்டிய நிலையில் உள்ள இயற்கையான பாறை என்பதால் எழுத்துக்கள் சற்று சிதைந்து பொருள் கொள்ள முடியா சூழலில் இருந்தது.

 இங்கு எடுக்கப்பட்ட நிழற்படங்களைத் தமிழகத்தின் முதுபெரும் கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சு.ராசகோபாலுக்கு அனுப்பி கல்வெட்டுச் செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டன.
பாறையின் ஒரு முகப்பில் கல்வெட்டும், மறுமுகப்பில் அழகிய சூலமும் பொறிக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டே இக்கல்வெட்டு கொடைச் செய்தியை விவரிக்கும் சூலக்கல் கல்வெட்டு என்பதை அறியமுடிகிறது.

இது, போசள மன்னர்களில் ஒருவரான ‘வீரராமநாதனின்’ ஆட்சிக்காலத்தைச் சேர்ந்ததாகும். இம்மன்னர் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள ‘குந்தாணியை’ தலைநகராகக் கொண்டும், திருச்சிராப்பள்ளியை அடுத்த கண்ணூரைப் (இன்றைய சமயபுரம்) படைத்தளமாகவும் கொண்டு ஆட்சி செய்த மன்னராவார். இவரது காலம் கி.பி. 1254 -1295 ஆகும். மடவாளத்தில் உள்ள இக்கல்வெட்டு இம்மன்னரது 5வது ஆட்சியாண்டில் எழுதப்பட்டதாகும். அதாவது கி.பி. 1259ல் எழுதப்பட்டதாகும்.

வீரராமநாதனின் படைத்தளபதியாக விளங்கியவரும் மாடப்பள்ளி பகுதியின் பிரதானியுமான வல்லாள தண்ணாக்கன் (தண்டநாயகன்) இக்கல்வெட்டினை பொறித்துள்ளார். அவரது ஆணைப்படி, இவ்வூர் ஏரிப்பாசனத்தின் கீழ் உள்ள  குறிப்பிட்ட அளவு நிலத்தினை விதைத்து மாடப்பள்ளியில் உள்ள சிவன் கோயில் இறைக்காரியங்களுக்குச் செலவிட கொடையாக கொடுத்த செய்தியை விவரிக்கிறது. மாடப்பள்ளி சிவன் கோயில் என்பது மடவாளம் அங்கநாதீஸ்வரர் கோயிலாக இருக்கக்கூடும். இக்கல்வெட்டு 800 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

திருப்பத்தூர் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புகளை எடுத்துரைக்கும் இதுபோன்ற அழிவுறும் நிலையில் உள்ள எண்ணற்ற ஆவணங்களை மீட்டெடுக்கும் பணியில் எமது குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். மாவட்ட நிர்வாகம் சிறப்புக் கவனம் செலுத்தி இதுபோன்ற வரலாற்று எச்சங்களை உரிய முறையில் பாதுகாத்திட முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Tags : Bhosala King Inscription ,Madavalam Village ,Tirupattur , Tirupattur: Inscription of 13th century Bhosala king at Madavalam village near Tirupattur.
× RELATED மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க...