×

கோவை, ஈரோட்டை சேர்ந்த 186 பேரிடம் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி-பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார்

கோவை : கோவையில் அலுவலகம் அமைத்து சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று கோவை எஸ்.பி அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கோவை வடவள்ளி மருதமலை ரோட்டில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் சார்பில் கடந்த மே மாதம் சிங்கப்பூரில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் பல இடங்களில் பிளக்ஸ் பேனர் அமைத்தும் விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தது.

அதில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது சிங்கப்பூரில் பிரபல கம்பெனிக்கு மாதம் ரூ. 3 லட்சம் சம்பளத்தில் வேலை இருப்பதாகவும், சிவில் இன்ஜினியர், சூப்பர்வைசர், பிட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர். வடவள்ளி ஏஜென்சி அலுவலகத்தில் நேரில் சென்று விசாரித்தபோது விசா, பயண கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இதனை நம்பி ஆண்கள், பெண்கள் என 150க்கும் மேற்பட்டோர் ரூ. 1 லட்சம், ரூ. 1.5 லட்சம், ரூ.2 லட்சம் என ஆன்லைன் மூலமாகவும் நேரிலும் பணம் செலுத்தினோம்.

பின்னர் எங்களது செல்போன் எண்ணுக்கு சிங்கப்பூர் நிறுவனத்தில் வேலை ரெடியாகிவிட்டது என போலியாக குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக ஏஜென்சி நிறுவனத்தை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. நேரில் சென்று பார்த்தபோது அலுவலகத்தை பூட்டி விட்டு தலைமறைவானது தெரியவந்தது. ஏஜென்சி நிறுவனத்தின் உரிமையாளராக ராமமூர்த்தி, ஹெச்.ஆர் மோகன் மற்றும் ஊழியர்கள் சரண்யா, ஜோதி ஆகியோர் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். அவர்கள் 186 பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக உள்ளனர். எனவே வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

Tags : Coimbatore ,Erode ,Singapore , Coimbatore: Action should be taken against those involved in fraud involving setting up an office in Coimbatore and getting jobs in Singapore
× RELATED கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரயில்