மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது: காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு

சேலம்: கர்நாடகா அணைகளில் இருந்து 1,10,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் கே.ஆர்.எஸ், மற்றும் கபினி அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடியில் இருந்து 1,10,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து 85 ஆயிரம் கன அடியாக உள்ளது. தமிழ்நாட்டுக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்திருக்கும் நிலையில் காவிரி ஆற்றில் ஒகேனக்களுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1 லட்சம் கன அடியாக உள்ளது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. 68 வது ஆண்டாக 100 அடியை மேட்டூர் அணை எட்டியுள்ளது. அணையின் செயற்பொறியாளர் சிவக்குமார் மற்றும் உதவி செயற்பொறியாளர் மதுசூதனன் ஆகியோர் காவிரி அணைக்கு மலர்தூவி வரவேற்றனர். தற்போது காவிரி டெல்டா பாசனத்திற்காக 15 ஆயிரம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நீரின் வரத்து 80 ஆயிரம் கன அடிக்கு மேல் உள்ளது. இதே நிலை நீடித்தால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

Related Stories: