×

நீதிமன்றத்துக்கு சென்று அதிமுக தலைமை அலுவலகத்தை சட்டப்பூர்வமாக மீட்டெடுப்போம்: எடப்பாடி பழனிசாமி உறுதி

சென்னை: நீதிமன்றம் சென்று சட்டப்பூர்வமாக அதிமுக தலைமை அலுவலகத்தை மீட்டெடுப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த கல் வீச்சில் காயமடைந்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிர்வாகிகளை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வானகரத்தில் சிறப்பு பொதுக்குழு நடைபெறும் நேரத்தில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் செல்ல வாய்ப்பு உள்ளது என தகவல் கிடைத்தவுடன் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக, இந்த தகவல் வந்ததால் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார் அளித்தோம். பிரதான எதிர்க்கட்சி 30 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தும் பாதுகாப்பு வழங்கவில்லை.

பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். ஆனால், ரவுடிகளை அழைத்து வந்த கட்சி நிர்வாகிகளை தாக்கியது உண்மையில் மன வேதனையை தந்துள்ளது. கட்சியின் நிர்வாகிகளை காப்பாற்ற வேண்டிய ஓபிஎஸ், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர், முதல்வர் என பதவிகளை வழங்கிய நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் இன்று வெகுமதியை தந்துள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் அவருக்கு இருக்கை வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் 3 மீன்பாடி வண்டியில் கற்களை எடுத்து வந்து ரவுடிகள் நிர்வாகிகளை தாக்கி உள்ளனர். அதனை தடுக்க வேண்டிய காவல்துறை எதுவும் செய்யாமல் கட்சியின் நிர்வாகிகளை கைது செய்துள்ளனர். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

இன்று நடந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பு துரோகி ஓபிஎஸ்தான். ஓபிஎஸ் ஒரு சுயநலவாதி. தனக்கு கிடைக்காத பதவி வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என நினைப்பார். காவல்துறை பாதுகாப்போடு வாகனத்தில் அதிமுகவின் ஆவணங்களை அள்ளி சென்றுள்ளார். இது எவ்வளவு கேவலம். காலம் மாறும், யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம். நீதிமன்றத்தின் மூலமாக நியாயத்தை பெற்று அதிமுக தலைமை அலுவலகம் திறக்கப்படும். 98% பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுடன் உள்ளனர். எனவே அதிமுக எங்களுடன் வலிமையாக உள்ளது. ஓபிஎஸ் செயல் கேவலமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினர்.

Tags : Edapadi Palanisamy , We will go to court and restore AIADMK head office legally: Edappadi Palaniswami assured
× RELATED தூத்துக்குடியில் முதல்வர்...