எடப்பாடி பொதுச்செயலாளர் ஆனதே கேள்விக்குறி ஓபிஎஸ்சை நீக்கியது எப்படி செல்லும்? சசிகலா கேள்வி

சென்னை: எடப்பாடி பொதுச்செயலாளர் ஆனது கேள்விக்குறியாக இருக்கும்போது, அவர் ஓபிஎஸ்சை நீக்கியது எப்படி செல்லுபடியாகும் என சசிகலா கேள்வி எழுப்பி உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் நேற்று சசிகலா அளித்த பேட்டி: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வந்தவர்கள் இது போன்ற நிகழ்வை செய்ய மாட்டார்கள். சொந்த நலனுக்காக கூட்டப்பட்ட பொதுக்குழுவாக தான், நான் இதை பார்க்கிறேன். என்னுடைய வழக்கு நிலுவையில் இருக்கும்போது இது போன்ற கூட்டம் நடத்தியதே தவறு. எடப்பாடி, பொதுச்செயலாளர் ஆனது கேள்விக்குறியாக இருக்கும்போது, அவர் ஓபிஎஸ்சை நீக்கியது எப்படி செல்லுபடி ஆகும். கடந்த காலங்களில் பொதுக்குழுவில் வரவு-செலவு அறிக்கை என்பதை பொருளாளர் தான் வாசிப்பார். ஆனால் தற்போது பொருளாளர் இல்லாமல் பொதுக்குழு நடந்துள்ளது. வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதை எவ்வாறு பொதுக்குழுவாக ஏற்றுக்கொள்வது. தொண்டர்கள் யாரை நினைக்கிறார்களோ, அவர்கள் தான் பொதுச்செயலாளராக அதிமுகவில் ஆக முடியும். கட்சி தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் எனக்கு அதிக அளவு ஆதரவு பெருகி உள்ளது. இவர்கள் போன்று நான் இன்று ஒரு பேச்சு, நாளை ஒரு பேச்சு என்று பேச மாட்டேன். என்றைக்கு பெங்களூரில் இருந்து நான் வந்தேனோ அன்றிலிருந்து ஒன்றுபட்ட அதிமுக தான் வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறேன். அதை செயல்படுத்தியும் காட்டுவேன். இவ்வாறு அவர் கூறினார். ஓபிஎஸ் தற்போது உங்களை நாடி வந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டதற்கு சசிகலா, இது காலம் பதில் சொல்ல வேண்டியது என்றார்.

Related Stories: