அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் என்ன நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்பது ரத்து: எடப்பாடிக்கு அதிக அதிகாரத்துடன் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கம்

சென்னை: சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: அதிமுக அமைப்பு தேர்தலின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழத்துக்கள். பெரியார், அண்ணா, ஜெயலலிதாவுக்கு `பாரத் ரத்னா’ விருது, விரைந்து வழங்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வலியுறுத்துவது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமையை ரத்து செய்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும். அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பொறுப்பு உருவாக்கப்படும்.

பொதுச் செயலாளர் விடுவிக்கப்பட்டாலோ, நீக்கப்பட்டாலோ, செயல்படாத நிலை ஏற்பட்டாலோ, அப்பொறுப்பு காலியாகும் நிலை ஏற்பட்டால், கட்சியை வழிநடத்துவதில் பல்வேறு நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் அரசியல் ரீதியாக பல்வேறு சோதனைகளை சந்திக்க வேண்டி உள்ளது. அதைத் தவிர்க்கும் பொருட்டு, அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டால்,  இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட வேண்டும். இடைக்காலப் பொதுச் செயலாளர், பொதுச் செயலாளருக்கான பணிகளையும், கட்சி நிர்வாகத்தையும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அதன்படி, பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களால், அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, கட்சியின்  இடைக்காலப் பொது செயலாளராக தேர்வு செய்யப்படுகிறார்.

பொதுச் செயலாளருக்கு, கட்சியின் விதிகள் தரும் அனைத்து அதிகாரங்களையும் எடப்பாடி கே.பழனிசாமிக்கு இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் கட்சி நிர்வாகத்தை நடத்திவர, இந்தப் பொதுக்குழு ஒருமனதாக அங்கீகாரம் வழங்குகிறது. பொதுச் செயலாளருக்கான தேர்தல் இன்றைய தேதியில் இருந்து நான்கு மாதங்களுக்குள் நடத்தப்படும். பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தலை நடத்துவதற்காக அமைப்புச் செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன், தேர்தல் பிரிவுச் செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஏ.ஜெயராமன், தேர்தல் அதிகாரிகளாக இப்பொதுக்குழுவால் நியமிக்கப்படுகிறார்கள். ஜெயலலிதா கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராகப் போற்றப்படுவார். அவர் வகித்த பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு இனி யாரும் தேர்ந்தெடுக்கப்படவோ அல்லது நியமிக்கப்படவோ மாட்டார்கள் என்பது ரத்து செய்யப்படுகிறது.

கட்டுமானப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலையேற்றம் முதலானவற்றை தடுக்க வேண்டும். மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த ஒன்றிய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்படும். இலங்கை தமிழர்களின் நலன் காக்கவும், அவர்களின் மறுவாழ்வை மேம்படுத்தவும், ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தல். நெசவாளர்களின் துயர் துடைக்கும் விதமாக, நூல் விலையேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தல் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: