கோவையில் தொடரும் அதிரடி எஸ்.பி வேலுமணி நண்பரின் தம்பி, தந்தை வீட்டில் சோதனை

கோவை: கோவையில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் நண்பர்கள், பினாமி வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. எஸ்.பி. வேலுமணியின் நெருக்கமான நண்பரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான இன்ஜினியர் சந்திரசேகர் வீட்டில் கடந்த 8ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து எஸ்.பி. வேலுமணியின் நண்பரான சந்திரபிரகாஷின் பீளமேட்டில் உள்ள கேசிபி இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று 6வது நாளாக சோதனை நடந்தது.

மேலும் சந்திரபிரகாஷ் வசித்து வரும் பீளமேடு கொடிசியா வளாகம் அருகேயுள்ள அடுக்குமாடி அபார்ட்மென்ட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதற்கிடையே குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் நெருக்கமான உதவியாளர் சந்தோஷ் என்பவரின் தம்பி வசந்தகுமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நேற்று மருதமலையில் உள்ள இன்ஜினியர் சந்திரசேகரின் தம்பி செந்தில்பிரபு வீட்டில் ரெய்டு நடந்தது. கோவை மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராக உள்ளார். சந்திரசேகரின் தந்தை ராஜன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சந்திரசேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் ரூ.50 கோடிக்கு அதிகமான சொத்துக்கள் இருப்பதாக தெரிகிறது. இதுபற்றி விசாரணை நடக்கிறது.

Related Stories: