தமிழக அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பல கோரிக்கைகள் ஏற்பு: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தையில் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளன. ஒருசில கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார். தமிழ்நாடு அரசு அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த ஐந்தாம் கட்டப் பேச்சுவார்த்தையானது போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்  தலைமையில் நேற்று குரோம்பேட்டை, மாநகர் போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் கோபால், நிதித்துறை கூடுதல் செயலாளர் அருண் சுந்தர் தயாளன் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர் செயலாளர், கூட்டுனர் குழு, துணைக் குழு உறுப்பினர்கள் மற்றும்  பதிவு செய்யப்பட்ட 66 பேரவை தொழிற்சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா காலக் கட்டத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு  ஒருமுறை சிறப்பு ஊதியமாக ரூ.300 வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, ரூ.300வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஒரு முறை மட்டும் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு 1078 தொழில்நுட்பப் மேற்பார்வையாளர்கள், போக்குவரத்து மேற்பார்வையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சலவைப்படி, தனிபேட்டா, ஸ்டியரிங் அலவன்ஸ், ரிஸ்க் அலவன்ஸ், ரீபில் அலவன்ஸ், இரவு பணிப்படி, இரவு தங்கல் படி ஆகியவற்றிற்கு உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் பொதுவான நிலையாணை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை  ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மலைவாழ்படி ரூ.1500 உள்ளதை ரூ.3000ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு, அந்த போராட்டங்களில் பங்கேற்று அவர்கள் பணிக்கு வராத காலங்கள் முறைப்படுத்தப்பட்டு, அக்காலத்தை பணி தொடர்ச்சிக்கு எடுத்துக்கொண்டு ஆய்வுபலன் வழங்கப்படும் என இன்றைய பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், சில கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.அவற்றை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான தீர்வுகள் எட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

Related Stories: