நாட்டு மாடுகள் மட்டுமே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி என்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு இடைக்கால தடை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: ஜல்லிக்கட்டு விளையாட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டும் அனுமதித்து, வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவில், ‘ஜல்லிக்கட்டு விளையாட்டில் நாட்டு மாடுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன் வாதத்தில், ‘‘செயற்கை கருவூட்டல் முறை குறித்த முக்கிய அம்சங்களை சென்னை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் எந்தவித முகாந்திரமும் கிடையாது. அதனால் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள தகுதி வாய்ந்த நாட்டு மாடுகள் உட்பட அனைத்து வகையான மாடுகளையும் அனுமதிக்க வேண்டும்.

நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என தெரிவித்தார். வாதங்களை பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நாட்டு மாடுகளை மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற வழங்கிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், அதேப்போன்று, இந்த விவகாரம் தொடர்பாக எதிர் மனுதாரர் நான்கு வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: