×
Saravana Stores

கொரோனா 3வது அலைக்கு காரணமாக அமையுமா? டெல்டா பிளஸ் வைரசால் புதிய ஆபத்து: மிக வேகமாக பரவும் நிபுணர்கள் எச்சரிக்கை

புதுடெல்லி: கொரோனா 2வது அலையில் இருந்து இந்தியா மீண்டு வரும் நிலையில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘டெல்டா  பிளஸ்’ உருமாற்ற கொரோனா வைரஸ் 3வது அலைக்கு அடித்தளமிடுமா என்ற பீதி ஏற்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் இது, தடுப்பூசியால் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி தாக்கும் வல்லமை கொண்டது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா முதல் அலைக்குப்பின் கடந்த ஆண்டு இறுதியில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட அதே வேளையில், கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்களை பெற்று வருகிறது. இந்தியாவில் இரட்டை உருமாற்ற வகை வைரஸ் கடந்த அக்டோபர் மாதம் கண்டறியப்பட்டது. இதில், ‘டெல்டா’ வகை வைரஸ் என பெயரிடப்பட்ட வைரஸ்தான் இந்தியாவில் 2வது அலை படுமோசமாக காரணமாக அமைந்தது. தற்போது, இந்தியாவில் 2வது அலை வெகுவாக குறைந்து விட்ட நிலையில், இன்னும் சில மாதங்களில் 3வது அலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கு அடித்தளமிடும் வகையில், ‘டெல்டா பிளஸ்’ எனும் புதிய உருமாற்ற வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், ஏஒய்.1 எனப்படும் இந்த புதிய உருமாற்ற வகை கொரோனா வைரசை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது இப்போதுள்ள உருமாற்ற வைரஸ்களில் வித்தியாசமானதாக உள்ளது. இந்த வைரசின் ஸ்பைக் புரதம் கே417என் என்ற உருமாற்ற வகையை சேர்ந்ததாக அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஸ்பைக் புரதம், மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாண்டி பாதிக்க உதவக் கூடியது. எனவே, தடுப்பூசி மூலம் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தாக்கக் கூடியது என்பதால், தற்போது 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கும் டெல்டா பிளஸ் வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளது என்கின்றனர் நிபுணர்கள். தற்போதைய நிலையில்,  டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் 6 பேரை தொற்றி உள்ளது. இங்கிலாந்தில் 36 பேருக்கு இந்த புதிய வகை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 2 பேர் 2வது டோஸ் தடுப்பூசி போட்டு 14 நாட்களுக்குப் பிறகு டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மருத்துவ நிபுணர்கள் மத்தியில் புதிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது மிக வேகமாகவும் பரவும் தன்மை கொண்டிருப்பதாக ஆய்வில் தெரிய வந்திருப்பது பீதியை அதிகரித்துள்ளது. * பயப்பட வேண்டியதில்லைடெல்லியில் உள்ள சிஎஸ்ஐஆர் மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவன இயக்குநர் அனுராக் அகர்வால் கூறுகையில், ‘‘புதிய உருமாற்ற வைரசின் தரவுகள் குறைவான அளவே இருப்பதால் இப்போதைக்கு அந்த வைரசை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நோயின் தீவிரம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்த வைரஸ் அதிக வீரியத்துடன் பரவுவதற்கான ஆதாரங்களும் இல்லை,’’ என்றார்….

The post கொரோனா 3வது அலைக்கு காரணமாக அமையுமா? டெல்டா பிளஸ் வைரசால் புதிய ஆபத்து: மிக வேகமாக பரவும் நிபுணர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : 3rd wave ,New Delhi ,India ,2nd wave of Corona ,Corona ,Dinakaran ,
× RELATED இந்தியா – சீனா படைகள் வாபஸ்;...