காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் வேளாண் விரிவாக்க மைய கட்டிடம்: பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை

செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், புதியதாக கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் இருக்குமு்   ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துார் வட்டார வேளாண் துறைக்கு உட்பட்ட கருநிலம், கொளத்துார், பாலுார், ஆத்தூர் உள்ளிட்ட 39 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது.

மேலும், தோட்டக்கலை பயிர்களான காய்கறி, வாழை, பூ வகைகளும் குறிப்பிட்ட பருவத்தில் பயிரிடப்படுகின்றன.  வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்படும் உரம், விதை உள்ளிட்ட இடுபொருட்களை வாங்க, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த வேளாண்மை அலுவலகத்தை சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். அந்த கட்டிடங்கள் சேதமடைந்து காணப்பட்டதால், அந்த கட்டிடங்கள்  இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்ட முடிவானது. அதனடிப்படையில், ₹ 2 கோடி  மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த  வேளாண் விரிவாக்க மைய புதிய கட்டிடம் முழுவதுமாக  கட்டி முடிக்கப்பட்டு, 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து  வேளாண்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் ₹2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. தற்போது, முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைப்பதற்காக ஏற்பாடுகள் நடந்து வருகிறது’ என தெரிவித்தனர். மழைக்காலம் நெருங்கி வருவதால்,  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விரைவில் அந்த கட்டிடத்தை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என,  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: