×

மனதை சந்தோஷமாக்கும் ஒரு பிடி சோறு!

நன்றி குங்குமம் தோழி

தானத்திலேயே சிறந்தது அன்னதானம்.. என்ன சொல்லுங்க.. பசித்த வயிறுகள் வாடிப் போகாமல் காக்க நீளும் கரங்களில்தான் கடவுள் உண்மையில் குடியிருக்கிறார். பசியால் இருக்கும் ஒருவருக்கு உணவு கொடுத்து அவர் சாப்பிடுவதைப் பாருங்களேன்.. சொர்க்கமாக உணர்வீர்கள். அதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி வேறு எதிலுமே கிடைக்காது.

இப்படிப்பட்ட அருமையான சேவையைத்தான் சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ  கிருஷ்ணன் செய்து வருகிறார். இவர் 1998ம் ஆண்டு அமெரிக்காவில் செட்டிலானார். இருபது ஆண்டுகள் கடந்தும், அவரின் மனம் இன்றும் தான் வளர்ந்து வந்த சென்னையைச் சுற்றித்தான் வலம் வந்து கொண்டு இருக்கிறது. முக்கியமாக அவரின் வீட்டின் அருகாமையில் உள்ள பாலவிகார் இல்லம்... மாற்றுத் திறனாளிகள், கைவிடப்படப்பட்ட குழந்தைகள் என பலரின் அடைக்கல இல்லம். இவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஜெயஸ்ரீயின் மனதில் ஏற்பட்ட அந்த ஒரு உணர்வு தான் இன்றும் அந்த குழந்தைகள் தினமும் மூன்று வேளை வயிறார சாப்பிட உதவி வருகிறது.

‘‘நான்  படிச்சது, வளர்ந்தது எல்லாம் சென்னை தான். கல்யாணத்திற்கு பிறகு அமெரிக்க வாழ்க்கை. இங்கு டெக்சாஸ் மாகாணத்தில் செட்டிலாகிட்டேன். இங்கு வந்து நான் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்தேன். ஒரு பக்கம் ஆசிரியர் வேலையைப் பார்த்தாலும், எனக்கு வீட்டில் ஒரு பகுதி நேர வேலையைப் பார்த்தால் நன்றாக இருக்கும்ன்னு எண்ணம் ஏற்பட்டது. அப்படித்தான் பேக்கிங் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்வதைக் கற்றுக் கொண்டேன். நண்பர்கள் மூலம் ஆர்டர்கள் வர அதிலும் பிசியானேன்.

ஒரு பக்கம் ஆசிரியர் வேலை, மறுபக்கம் பேக்கிங், கைவினைத் தொழில்ன்னு மூன்று வேலையிலும் ஈடுபட்டேன். இதனால், ஒரு நேரத்தில், மூன்று வேலைகளையும் சரியாக கவனிக்கமுடியாத நிலை ஏற்பட்டது. அதனால் முழு நேரமாக நான் பார்த்து வந்த ஆசிரியர் வேலையை விட்டுவிட்டேன். முழுக்க முழுக்க பேக்கிங் மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டேன். மேலும் எனக்கு சிறு வயதில் இருந்தே, கைவினை செய்வதில் ஆர்வம் அதிகம். அதனால் அதுவே என்னுடைய முழு நேர வேலையாக மாறிப்போனது’’ என்ற ஜெயஸ்ரீ  சென்னைக்கு வரும் போது எல்லாம் பாலவிகாருக்கு செல்வதை
வழக்கமாக கொண்டுள்ளார்.

பொதுவாக வெளிநாடுகள் செல்பவர்கள், போகும் போது ஒரு ஐந்து வருஷம் தான். அதன் பிறகு நம்மால் அங்கு இருக்க முடியாதுன்னு சொல்லிட்டு தான் போவாங்க. ஆனால் அங்கு போன அடுத்த ஒரே ஆண்டில் அவர்களின் எண்ணம் முழுமையாக மாறிடும். தங்களின் குடும்பத்தினருடன் பேசக்கூட இவர்களுக்கு நேரம் இருக்காது. ஆனால் ஜெயஸ்ரீ  எப்போது சென்னை வந்தாலும் யாரைப் பார்க்கிறாரோ இல்லையோ, பாலவிகார் இல்லத்திற்கு போகாமல் இருந்ததில்லையாம். அவ்வாறு போகும் போது அந்த இல்லத்திற்கு தன்னால் முடிந்த உதவியினை செய்து வருகிறார்.

‘‘மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட முக்கிய காரணம் என் பெற்றோர். என்னுடைய பிறந்தநாள், அவங்க திருமண நாள் மற்றும் விசேஷ நாட்களில் ஏதாவது ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம் போன்ற இடங்களுக்கு சென்று அன்னதானம் வழங்குவதை வழக்கமாக கொண்டு இருந்தாங்க. அவங்க போகும் போது என்னையும் அழைத்துக் கொண்டு செல்வாங்க.

ந்த ஒரு நல்ல சாப்பாட்டினை சாப்பிடும் போது, அவங்க முகத்தில் ஏற்படும் சந்தோஷத்திற்கு எவ்வளவு கொடுத்தாலும் ஈடாகாது. அதை பார்க்கும் போது நம்முடைய மனமும் நிறைந்து போய் இருக்கும். இப்படி பார்த்து கொடுத்து வளர்ந்ததால், ஆதரவற்றவர்களுக்கு கடைசி வரை என்னால் முடிந்த உதவியினை செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும். இதற்காகவே கைவினை தொழிலை கையில் எடுத்தேன். அதன் மூலம் எனக்கு ஒரு வருமானம் கிடைத்தது.

அதை அந்த இல்லத்திற்காக கொடுக்கலாம் என்று நினைத்தேன். என் விருப்பத்தை என் கணவரிடம் சொன்ன போது, அவர் மறுப்பேதும் சொல்லாமல், என்னை ஊக்குவித்தார். மேலும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எல்லாரும் என்னை உற்சாகப்படுத்தினர். அவர்கள் அனைவரின் ஒத்துழைப்பால், ‘ஜே’ ஸ் கிரியேசன்ஸ்’ என்ற பெயரில் வீட்டிலேயே ஒரு பேக்கரியை ஆரம்பிச்சேன்.

அதன் மூலம் வரும் வருமானத்தை நான் சென்னைக்கு போகும் போது எல்லாம் அந்த இல்லத்திற்காக கொடுத்து வந்தேன். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், என்னால் இந்தியாவிற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது  சென்னையில் உள்ள  கருணை இல்லத்திற்கு வருடத்திற்கு ஒரு முறையாவது சென்று வருவேன். இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு கொரோனா வைரஸின் பரவல் தொடங்கியது. இந்தியா செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும் என்னால் பேக்கரியையும் செயல்படுத்த முடியவில்லை’’ என்றவர் அந்த இக்கட்டான நிலையிலும் குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவியினை செய்துள்ளார்.

‘வருடா வருடம் கண்டிப்பாக  என்னிடம் இருந்து அவர்களுக்கு உதவித் தொகை வரும் என்ற நம்பிக்கையில் இருக்கும் அவர்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை. அதே சமயம் எவ்வாறு நிதி திரட்டுவது என்றும் என் மனசு சஞ்சலப்பட்டது. அப்போதுதான் அமெரிக்காவில் இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் உதவி செய்யலாம் என்று யோசனை தோன்றியது.

அனைவரிடமும் வீடியோ மூலம் பேசினேன். அவர்களால் முடிந்த உதவியினை செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். அவர்களும் ஒத்துழைக்க ஒரு லட்சத்துக்கும் மேல் வரை என்னால் நிதியினை திரட்ட முடிந்தது. அந்த தொகையினை இல்லத்திற்கு அனுப்பி வைத்தேன். முடியாத காலக்கட்டத்திலும் என்னால் அவர்களுக்கும் உதவ முடிந்தது என்று நினைக்கும் போது ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்தது.

நாம் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவி செய்தாலும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு பிடி சோறு கொடுத்தால் போதும். அதற்கு எதுவுமே ஈடாகாது. முடிந்த வரை நம் கண் முன் ஆதரவற்று இருக்கும் குழந்தைகளுக்கு உதவி செய்து பாருங்க. மனசுக்கு அவ்வளவு நிம்மதி மற்றும் சந்தோஷம் கிடைக்கும்’’ என்கிறார் ஜெயஸ்ரீ.

தொகுப்பு: ஆனந்தி ஜெயராமன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!