19 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலில் கால்கோல் நடும் விழா

பெரியபாளையம்: பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வர்.  மேலும் இக்கோயிலில், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், திமுக ஆட்சி அமைந்தவுடன் தற்போது,  ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு மேல் கும்பாபிஷேகம் நடைபெறாத கோயில்களில் புனரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிறுவாபுரி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் புணரமைப்பு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. சிறுவாபுரி முருகன் கோயிலில் கடந்த 2003ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில் 19 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஆகஸ்ட் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு, கும்பாபிஷேக விழாவின் தொடக்கமாக, யாகசாலை அமைக்க கால்கோல் நடும் விழா நேற்று நடந்தது. ஆலய வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, யாகசாலைக்கான கால்கோல் மற்றும் ஆலய கோபுரத்திக்கான கால்கோல் நடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கும்பாபிஷேகத்திற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக, கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணி 1ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கி தொடந்து 5 நாட்கள் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு ஆவணி 5ம் தேதி ஆகஸ்ட் 21 ஞாயிற்றுகிழமை காலை 9 மணிமுதல் 10.30 மணிக்குள்ளாக மஹா கும்பாபிஷேகம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோயில் குருக்கள் ஆனந்தன், செயல் அலுவலர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி ராஜா, ஒன்றிய கவுன்சிலர் சந்துரு, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் பகலவன், ஸ்தபதி நடராஜன் மற்றும் கிராம பெரியோர்கள் பொதுமக்கள்  கலந்துகொண்டனர்.

Related Stories: