×

அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு; இலங்கையில் புதிய அதிபர் 20ம் தேதி தேர்வு: நாளை ராஜினாமா செய்ய கோத்தபய நேரில் வருவதாக சபாநாயகர் தகவல்

கொழும்பு: இலங்கையில் புதிய இடைக்கால அதிபர் வரும் 20ம் தேதி தேர்வு செய்யப்பட இருப்பதாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, அதிபர் பதவியை ராஜினாமா செய்ய கோத்தபய ராஜபக்சே நாளை நேரில் வர உள்ளதாக பரபரப்பு தகவலும் வெளியாகி உள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் தலைநகர் கொழும்புவில் கடந்த 9ம் தேதி மக்கள் புரட்சி வெடித்தது. போராட்டத்தில் குவிந்த ஆயிரக்கணக்கானோர் அதிபர் மாளிகை, அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். போராட்டம் பெரிய அளவில் வெடிக்கும் என முன்கூட்டியே கணித்திருந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே உயிருக்கு பயந்து தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார். மக்களின் கடும் எதிர்ப்பால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அதே போல, கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக சம்மதித்தார்.

புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கோத்தபய ராஜினாமா செய்த பிறகு, அனைத்து கட்சிகளும் அடங்கிய அரசு அமைப்பதென தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், பிரதமர் ரணிலைத் தொடர்ந்து ஒட்டுமொத்த அமைச்சரவையும் கூண்டோடு ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தனர். ஆனால், இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி, அதிபர் கோத்தபய அதிகாரப்பூர்வமாக பதவி விலகாமல், பிரதமர் உட்பட அமைச்சர்கள் யாரும் பதவியிலிருந்து விலக முடியாது. அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டுமெனில், கோத்தபய நேரில் வந்து சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை தர வேண்டும். இதற்கிடையே, 13ம் தேதி ராஜினாமா செய்வதாக கோத்தபய ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அதை அவர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருப்பதாக பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து, புதிய அரசு அமைப்பதற்காக நேற்று மீண்டும் அனைத்து கட்சி தலைவர்கள் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்த்தனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில், வரும் 20ம் தேதி புதிய இடைக்கால அதிபரை தேர்வு செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்கா அளித்த பேட்டியில், ‘‘வரும் 13ம் தேதி (நாளை) அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினால், அதைத் தொடர்ந்து புதிய அரசு அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். அந்த வகையில், நாடாளுமன்றம் வரும் 15ம் தேதி கூட்டப்படும். அதிபர் பதவிக்கான வேட்பு மனுக்கள் வரும் 19ம் தேதி வரை ஏற்கப்படும். பின்னர் 20ம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்டு, புதிய இடைக்கால அரசு பொறுப்பேற்கும்’’ என்றார்.

இதற்கிடையே, கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்ய நாளை நேரில் வர உள்ளதாக சபாநாயகர் அபேவர்த்தனா அறிவித்துள்ளார். அபேவர்த்தனா தான் தற்போது தற்காலிக அதிபராக பொறுப்பு வகித்தார். கோத்தபய அதிகாரப்பூர்வமாக பதவி விலகும் வரை அதிபர் மாளிகையை விட்டு வெளியேற மாட்டோம் என போராட்டக்காரர்கள் அங்கு தொடர்ந்து தங்கி உள்ளனர். இந்தநிலையில், அதிபர் கோத்தபய முதல் முதலாக நேரில் வர இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே வீடும் போச்சு..
* ‘‘எனக்கு இருந்தது ஒரே ஒரு வீடுதான். அதையும் போராட்டக்காரர்கள் எரித்து விட்டனர். பொருளாதாரத்தை ஒரே நாளில் சரி செய்து விட முடியாது. குறைந்தது ஓராண்டாவது ஆகும். எனது வீட்டிலிருந்த 2,500 அரிய புத்தகங்களும் எரிந்து போய்விட்டதை தாங்க முடியவில்லை’’ என புலம்பி உள்ளார் ரணில் விக்ரமசிங்கே.
* அதிபர் மாளிகையில் முதலில் போராட்டக்காரர்கள் நுழைந்த போது, அவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தவில்லை என இலங்கை ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
* இலங்கையில் போராட்டத்தை அடக்க இந்தியா தனது ராணுவத்தை அனுப்பியதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என இலங்கையில் உள் இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.

எங்கு இருக்கிறார் கோத்தபய? குழப்பும் சபாநாயகர்: கோத்தபய எங்கிருக்கிறார் என்பது தொடர்பாக நேற்று பேட்டி அளித்த சபாநாயகர் அபேவர்த்தனா, ‘‘அவர் இலங்கையில் இல்லை. வெளிநாடு தப்பி விட்டார். இலங்கைக்கு அருகில் உள்ள நாட்டில் பத்திரமாக உள்ளார். வரும் 13ம் தேதி பதவியை ராஜினாமா செய்ய நேரில் வருவார்’’ என கூறினார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அடுத்த சிறிது நேரத்திலேயே தனது பேச்சை மாற்றிய சபாநாயகர் அபேவர்த்தனா, ‘‘இல்லை. தவறாக கூறிவிட்டேன். கோத்தபய நாட்டை விட்டு வெளியேறவில்லை. இங்கு தான் உள்ளார்’’ என்றார். இந்த விஷயத்தில் சபாநாயகர் முன்னுக்கு பின் முரணாக தகவல் வெளியிடுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.  ஏற்கனவே அதிபர் தொடர்பான தகவல்கள் சபாநாயகர் மூலமாக மட்டும் வெளியிடப்படும் என அதிபர் அலுவலகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதனால் திரைமறைவில் இருந்து கோத்தபய செயல்படுகிறாரா, அவர் நிச்சயம் நாளை பதவியை ராஜினாமா செய்வாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஆட்சி அமைக்க பிரேமதாசா தயார்: இதற்கிடையே, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (எஸ்ஜேபி) ஆட்சி அமைக்க தயார் என அறிவித்துள்ளது. அதன் தலைவர் சஜித் பிரேமதாசா அளித்துள்ள பேட்டியில், ‘‘புதிய அதிபர், புதிய பிரதமரை நியமித்து நாட்டை வழிநடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்கு மாற்று வழி எதுவும் இல்லை. எனவே, நாடாளுமன்றத்தில் யாராவது எதிர்க்கவோ, சீர்குலைக்கவோ முயன்றால், நம்பத்தகாத விளைவுகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்’’ என்றார். ஆனால் எஸ்ஜேபி கட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லை. நாடாளுமன்றத்தில் வெற்றி பெற 113 எம்பிக்கள் ஆதரவு தேவை. எஸ்ஜேபிக்கு 50 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர்.



Tags : Sri Lanka ,Gothabaya ,Speaker , Decision at the all-party meeting; Election of new President in Sri Lanka on 20th: Speaker informs Gotabaya to resign tomorrow
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...