×

எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுக உடைந்த வரலாறு

சென்னை: அதிமுக நிறுவனர் எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவ்வப்போது கட்சி யாருக்கு என்று பிரச்னை வருவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது. அதிமுகவின் அசைக்க முடியாத தலைவராக எம்ஜிஆர் இருந்தபோதும் அவருக்கு எதிரான குரல்களும் அக்கட்சியில் இருந்தன. ஜெயலலிதாவை அதிமுகவுக்குள் எம்ஜிஆர் கொண்டுவந்தபோது மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.டி.சோமசுந்தரம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் 1984ம் ஆண்டு அதிமுகவில் இருந்து எஸ்.டி.சோமசுந்தரத்தை எம்ஜிஆர் நீக்கினார். அத்துடன் அதிமுகவை விட்டு வெளியேறி ‘நமது கழகம்’ என்ற தனிக்கட்சி தொடங்கினார். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பிரச்னை வந்தது இல்லை. எம்ஜிஆர், ஆர்.எம்.வீரப்பன் உட்பட பல மூத்த தலைவர்கள் ஒட்டுமொத்தமாக அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்தபோதுகூட அதிமுகவில் பிரளயம் ஏற்பட்டது இல்லை.

* 1989ம் ஆண்டு தேர்தலில் ஜானகி அணிக்கு இரட்டை புறா, ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னம் ஒதுக்கப்பட்டது. தேர்தலில் ஜானகி அணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் தோற்றதால் ஜெயலலிதா அணியே உண்மையான அணி என தொண்டர்கள் நினைத்தனர். ஜானகியும் அரசியலுக்கு முழுக்கு போட்டார். அதிமுக சின்னம், தலைமை அலுவலகம், கட்சி அனைத்தும் ஜெயலலிதா வசமானது.

* இந்த நிலையில்தான், ஜெயலலிதாவின் வலதுகரங்களாக இருந்த திருநாவுக்கரசர், சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரை அதிமுகவில் இருந்து ஜெயலலிதா நீக்கினார். இவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்றபோது மிகப்பெரும் ரத்தக்களறி ஏற்பட்டது. ஆனால், கட்சி அலுவலகம் செல்வதை போலீஸ் தடுத்து நிலைமையை  கட்டுப்படுத்தியது. இந்த சம்பவம் நடந்ததும் 1989ம் ஆண்டுதான். இதையடுத்து நெடுஞ்செழியன், ராசாராம், அரங்கநாயகம், பண்ருட்டி ராமச்சந்திரன் என்ற நால்வர் அணி உதயமானது.

* 1995ம் ஆண்டு ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த பாட்ஷா பட வெள்ளி விழாவில் பேசிய ரஜினிகாந்த், வெடிகுண்டு கலாசாரம் பற்றியும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி குறித்தும் விமர்சனம் செய்தார். அப்போது ஜெயலலிதாவின் அமைச்சரவையில் உணவு அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் ‘எம்ஜிஆர் கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார்.

* ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, 2017ம் ஆண்டு சசிகலாவுக்காக ஓபிஎஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது தர்மயுத்தம் நடத்தினார் ஓபிஎஸ். ஆனாலும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அவர் உரிமை கோரவில்லை. ஒரு கட்டத்தில் டி.டி.வி.தினகரன் அதிமுகவில் போர்க்கொடி தூக்கியபோது தலைமை அலுவலகம் குறித்து பஞ்சாயத்து மீண்டும் வெடித்தது. அதிமுக தலைமை கழகத்துக்கு தினகரன் உரிமை கோரிக்கை. பின்னர் அதை கைவிட்டு, அமமுக என தனிக்கட்சி ெதாடங்கினார்.

இதன்பின்னர் சசிகலா சிறையில் இருந்து விடுதலையான பின்னர் எப்போது வேண்டுமானாலும் அதிமுக தலைமை அலுவலகம் செல்வார் என கூறப்பட்டே வந்தது. இந்த நிலையில் அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கோஷ்டி மோதல்கள் பகிரங்கமாக வெடித்தன. அண்மையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தின்போது ஓபிஎஸ் படம் கிழிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அந்த படம் வைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் இன்று அதிமுக பொதுக்குழு ஒரு பக்கம் நடக்க அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் தரப்பு அதிமுக தலைமை கழகத்தைக் கைப்பற்றியது. இதற்கு இபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவிக்க இருதரப்பும் இடையே மோதல் வெடித்தது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. கத்திக்குத்து சம்பவங்களும் நிகழ்ந்தன. ஓபிஎஸ் ஆதரவாளர்களை போலீஸ் அதிரடியாக வெளியேற்றதுடன், கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்தான், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலராக இபிஎஸ் தேர்வாகி உள்ளார். அதேநேரம், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் யாருக்கு? என்கிற விவகாரமும் பூதாகரமாகி உள்ளது.

Tags : AIADMK ,MGR ,Jayalalitha , History of MGR, Jayalalitha, AIADMK breakup
× RELATED அதிமுக மாஜி எம்எல்ஏ காரில் சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்