நெல்லை, தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் பருவமழை தீவிரம்

நெல்லை: நெல்லை, தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நாளை முதல் மேலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தப்படி ஜூன் மாதம் தொடங்காத நிலையில் கடந்த 10 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பிற பகுதிகளில் பலத்த காற்று வீசுவதோடு அவ்வப்போது சாரல் மழையும் பொழிகிறது. இதன் காரணமாக அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

நேற்று காலை நிலவரப்படி பாபநாசம் அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 54.5 கனஅடிநீர் வந்து கொண்டிந்தது. அணையில் இருந்து 804.75 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது.  அணை நீர் இருப்பு 59.65 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர் இருப்பு 73.36 அடியாக உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர் இருப்பு 74.50 அடியாக உள்ளது. இதேபோல் தென்காசி மாவட்டம் குண்டாறு அணைப்பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 1 மில்லி மீட்டர் மழையும், அடவிநயினார் அணைப்பகுதியில் 3 மிமீ மழை பெய்தது. குண்டாறு அணை அதன் முழு கொள்ளளவான 36.10 அடியாக நிரம்பி வழிகிறது அணைக்கு வரும் 18 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.

நேற்று பகல் முழுவதும் மேகமூட்டமாக இருந்தது. மாலையில் குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாளை முதல் அடுத்த 2 தினங்களுக்கு இரு மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: