×

2 ஆண்டுகளுக்கு பிறகு விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே கூடுதல் பயணிகள் ரயில் இயக்கம்; பொதுமக்கள் மகிழ்ச்சி

விழுப்புரம்: விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே கூடுதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில் சேவைகள் கடந்த இரு ஆண்டுகளாக முடங்கி இருந்தன. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில், இந்த ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன. இருப்பினும் பல முக்கிய வழித்தடங்களில் பயணிகள் ரயில் சேவை இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில்கள், அதிவிரைவு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்ட போதிலும் பயணிகள் ரயில்கள் பல வழித்தடங்களில் முழுமையாக இயக்கப்படாமல் இருந்து வந்தது. குறிப்பாக, விழுப்புரத்திலிருந்து, சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட மார்க்கங்களில் பயணிகள் ரயில் வழக்கம்போல் இயக்கப்படவில்லை.

விழுப்புரத்தில் காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் மயிலாடுதுறைக்கு காலை 9.10க்கு சென்றடையும் வகையில் ஒரு ரயில் மட்டும் இயக்கப்பட்டது. மறு மார்க்கத்தில் மாலை 6 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்பட்டு விழுப்புரத்துக்கு இரவு 9.10க்கு வரும் வகையில் ஒரு பயணிகள் ரயில் மட்டும் இயக்கப்பட்டது.
ஆனால் இரு மார்க்கத்திலும் கூடுதலாக பயணிகள் ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோருக்கு பயணிகள் ரயில் சேவை தேவை என்று வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் விழுப்புரத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கு மயிலாடுதுறைக்கு செல்லும் பயணிகள் ரயில் சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டது. இந்த ரயில் இரவு 9 மணிக்கு மயிலாடுதுறை சென்றடைகிறது. பின்னர் மறு மார்க்கத்தில் காலை 6 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் ரயில் காலை 9 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். இதேபோல் விழுப்புரத்தில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு மயிலாடுதுறைக்கு மேலும் ஒரு பயணிகள் ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்படுகிறது.

அந்த ரயில் மாலை 5.45 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கூடுதலாக ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Vilupupuram ,Mayiladududdhara , Additional passenger train operation between Villupuram-Mayiladuthurai after 2 years; People are happy
× RELATED அரசியலில் யாருக்கும் ரஜினிகாந்த்...