கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு; ஊட்டியில் தங்கியிருந்த தனபால், ரமேஷ் கடத்தல்?

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளி சேலம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது விபத்து வழக்கு தற்போது மீண்டும் எடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இது பற்றி கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் தடயங்களை அழித்ததாக அவர்கள் 2 பேரையும் சோலூர்மட்டம் போலீசார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்தனர்.

கடந்த ஜனவரி மாதம் 2 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அதில் தனபால், ரமேஷ் ஆகியோர் நீலகிரியில் தங்கி நாள்தோறும் சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரி இருவரும் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த மார்ச் 14ம் தேதியன்று தனபால், ரமேஷ் ஆகியோர் ஊட்டியில் தங்கி இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10 மணிக்கு கோத்தகிரி காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் எனவும் தளர்வு அளித்தது.

இதன் அடிப்படையில் இருவரும்  திங்கட்கிழமைதோறும் கோத்தகிரி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர். இருவரையும் போலீசார் கண்காணித்து வந்தனர். ஆனால் கடந்த இரு நாட்களாக அவர்கள் ஊட்டியில் இல்லை. அவர்கள் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் தலைமறைவாகி இருக்கலாம் என்றும், அவர்களை மர்ம நபர்கள் கடத்தியிருக்கலாம் என்றும் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. அவர்களை கொடநாடு வழக்கை விசாரிக்கும் தனிப்படையினர் கைது செய்திருக்கலாம் எனவும் தகவல் பரவியது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, ‘‘அவர்கள் 2 பேரும் வழக்கு விசாரணைக்காக சேலம் சென்றிருக்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.

Related Stories: