×

கோவை வன உயர் பயிற்சியக நாற்றங்கால் பண்ணையில் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு-பருவமழையில் மரக்கன்றுகளை நடவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு

கோவை : கோவை வடகோவையில் உள்ள வனஉயர் பயிற்சியகத்தில் உள்ள நாற்றாங்கால் பண்ணையில் தமிழக வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ், அடுத்த 10 ஆண்டுகளில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை 23.8 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.

அதன்படி, வன பகுதிகளில் காடு வளர்ப்பு மற்றும் வனப்பகுதிகளுக்கு வெளியே மரம் நடுதல், விவசாய நிலங்களில் விவசாய பயிர்களோடு வருமான வாய்ப்புகளை அதிகரிக்க மரம் வளர்த்தல், சமூக, பொது மற்றும் தனியார் பங்களிப்போடு வளர்ந்து வரும் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் பசுமை தமிழகம் இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தின் கீழ் கோவை வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வனவியல் விரிவாக்க கோட்ட நாற்றங்கால்கள் மூலம், விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள், கல்வி நிறுவனங்கள், அரசுநிலங்கள் மற்றும் தாழ்வான வன நிலங்களில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி 82 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மர இனங்களுக்கான தேக்கு, மகாகனி, மலைவேம்பு, சவுக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, வேம்பு, ஈட்டி, புங்கன், சரக்கொன்றை, புளி, கொடுக்காபுளி, கொய்யா, நெல்லி, பாதாம் மற்றும் நாவல் போன்ற மரக்கன்றுகள் வனவியல் விரிவாக்க நாற்றங்கால்கள் மூலம் கோவை மாவட்டத்தில் உற்பத்தி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.    

பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் வனத்துறையின் சார்பில் கோவை வனவியல் விரிவாக்க கோட்டம் மூலம் இலவசமாக 7 ஆயிரம்  மரக்கன்றுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் நாற்றங்கால் உற்பத்தி, எண்ணிக்கை, நடவுசெய்யப்பட வேண்டிய இடம் மற்றும் பயனாளிகள் விவரம், கிரீன் தமிழ்நாடு மிஷன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இத்திட்டத்தை கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தி வனப்பரப்பை அதிகரிக்கச் செய்து, பசுமையை ஏற்படுத்தும் நோக்குடன், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வனத்துறை முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், வடகோவை வன உயர் பயிற்சியகத்தில் உள்ள நாற்றங்கால் பண்ணையில் வனத்துறை மற்றும் சுற்றுசூழல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது நாற்றங்காலில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் குறித்தும், விநியோகிக்கப்பட்டுள்ள விவரங்கள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார். சிறப்பான முறையில் பராமரித்து வரும் நாற்றங்கால் பராமரிப்பு அலுவலகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

அப்போது, கோவை மாவட்டத்திற்கு 1.40 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகளுக்கு அளித்து ஊக்கப்படுத்தவேண்டும். இந்த பருவமழையின்போது மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும் என வனத்துறையினருக்கு உத்தரவிட்டார். மேலும், நாற்றங்கால்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், கூடுதல் இடங்களை ஏற்படுத்தி அப்பகுதிகளிலும் நாற்றுகளையும், மரக்கன்றுகளையும் உற்பத்தி செய்ய வனத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், எளிதில் மக்கக்கூடிய நெகிழி மாற்று உபயோக பொருட்களையும், பறவைகள் மீட்பு பராமரிப்பு மையத்தையும் கூடுதல் தலைமைச் செயலாளர் பார்வையிட்டார்.

 அப்போது, பறவைகள் மீட்பு மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட கிளிகள் மற்றும் பருந்து ஒன்றை அவர் கூண்டை திறந்து பறக்க விட்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சமீரன், கோவை ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியன் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், உதவி வனப்பாதுகாவலர் தினேஷ்குமார் உட்பட வனசரகர்கள் பலர் இருந்தனர்.

Tags : Chief Secretary ,Forest Department of Forest ,Cove Forest Higher ,Training Nurchery Ranch , Coimbatore: Tamil Nadu Department of Forestry and Environment at Naantangal Farm at the Forestry Training Institute in Vadakowai, Coimbatore.
× RELATED ஜூன் 11-ல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை