முத்துப்பேட்டையில் சாலையோரம் கொட்டப்பட்ட குப்பையில் ஏற்பட்ட திடீர் தீ-கிழக்கு கடற்கரை சாலையை மூடிமறைத்த கரும்புகை

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையோரம் கொட்டப்பட்ட குப்பையில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட தீ விபத்தால் கரும்புகை கிளம்பி சாலையை மறைத்தது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை ஆலங்காடு கிராம எல்லையில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் பல வருடங்களாக கொட்டப்பட்டு வந்தது.

தற்பொழுது மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்ததையடுத்து நகரில் குப்பைகள் அதிகளவில் சேருவதால் இந்த குப்பை கிடங்கு போதுமானதாக இல்லாமல் போனது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்ப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு குப்பைகள் கொட்ட முடியாமல் போனதால் அன்றாடம் சேரும் குப்பைகளை கிழக்கு கடற்கரை சாலையோரம் பேரூராட்சி நிர்வாகம் கொட்டி வந்தது. இதனால் கோவிலூர் ரவுண்டானா முதல் சாலையோரம் குப்பைகள் நிரம்பி கிடந்தன.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காலை யாரோ இந்த குப்பையில் கொளுத்திபோட்ட தீயால் கொழுந்து விட்டு எரிய துவங்கி பயங்கர தீயாக மாறி அப்பகுதி முழுவதும் கடும் கரும்புகையாக காணப்பட்டது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் தெரியாதளவில் புகை சூழ்ந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற பேரூராட்சி பணியாளர்கள் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டும், அதேபோல் முத்துப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனம் கொண்டும் பலமணிநேரம் தீயை போராடி அணைத்தனர். ஆனாலும் அதிலிருந்து கிளம்பும் புகையை கட்டுபடுத்த முடியவில்லை. இதனால் தொடர்ச்சியாக தீயணைப்பு வாகனம் கொண்டு தண்ணீர் அடித்து புகையை கட்டுப்படுத்தும் முயற்சி இரவு வரை தொடர்ந்து நடந்து வந்தது.

இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் திருத்துறைப்பூண்டி பகுதிக்கு செல்லும் போக்குவரத்தை துண்டித்து நகர் பகுதி சென்று செல்ல ஆலங்காடு பைபாஸ் சாலை மற்றும் கோவிலூர் ரவுண்டனா அருகே போலீசார் நிறுத்தப்பட்டு போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.இந்தநிலையில் இதுபோன்று அடிக்கடி இந்த சம்பவம் இப்பகுதியில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற ஏற்பட்ட தீ விபத்தின்போது கரும்புகையால் சாலையில் எதிரே வந்த வாகனம் தெரியாமல் போனதால் ஒரு பைக்கில் குழந்தையுடன் வந்த தம்பதி விபத்தில் சிக்கி குழந்தை பரிதாபமாக இறந்துபோனது. அதனால் இதற்கு ஒரு தீர்வு காணும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து பேரூராட்சிக்கு என நிரந்தர குப்பை கிடங்கு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: