திருவாரூர் மடப்புரத்தில் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே செல்லும் நடைபாலத்தை விரிவுபடுத்த வேண்டும்-பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

திருவாரூர் : திருவாரூர் மடப்புரத்தில் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே செல்லும் நடைபாலத்திற்கு பதில் புதிய பாலம் கட்டுமான பணியினை விரைந்து துவங்கிட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மடப்புரம் பகுதியில் இருந்து தஞ்சை சாலையை இணைக்கும் வகையில் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே நடைபாலம் ஒன்று கடந்த 40 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டு தற்போது வரையில் புழக்கத்தில் இருந்து வருகிறது.

தற்போது திருவாரூர் நகரம் மாவட்ட தலைநகரம் என்பதால் கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலகங்களுக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் என நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர்கள் வரையில் இந்த நகரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மடப்புரத்தில் உள்ள ஓடம்போக்கி ஆற்றில் கட்டப்பட்டுள்ள நடைபாலம் என்பது அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு மட்டுமின்றி, தாலுக்கா அலுவலகம் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் உட்பட பலவற்றிற்கும் முக்கிய பாலமாக இருந்து வருகிறது. பெயரளவில் நடைபாலம் என்ற போதும் இந்த நடைபாலத்தில் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.

மேலும் தற்போது புதிய பேருந்து நிலையம் தஞ்சை சாலையை ஒட்டியவாறு மாற்றப்பட்டுள்ளதால் இதற்காக தற்போது இந்த பாலத்தினை அதிகம் பேர் பயன்படுத்தும் நிலையும் இருந்து வருகிறது. இந்நிலையில் நகரின் வளர்ச்சிகேற்ப இந்த பாலத்தினை அகற்றி விட்டு 4 சக்கர வாகனம் செல்லும் வகையில் விரிவுபடுத்தி புதிதாக பாலம் கட்டி தர வேண்டும் என கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் வைக்கப்பட்ட கோரிக்கையினை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை.

இதற்கிடையே இந்த பாலமானது கடந்த 2 வருடத்திற்கு மேலாக கைப்பிடி சுவர் உட்பட பல்வேறு இடங்களில் பழுதடைந்து இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த நடைபாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்டப்படும் என தற்போதைய திமுக அரசு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 4 சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் புதியபாலம் கட்டுமான பணியினை விரைந்து துவங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: