ராமேஸ்வரத்தில் சாலையோர ஆக்கிரமிப்பால் வாகன நெரிசல்

*நாள்தோறும் சுருங்கி வரும் சாலை

*கார் பார்க்கிங் வசதி மேம்படுத்தப்படுமா?

ராமேஸ்வரம் : நாட்டின தென்கோடியில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு லட்சக்கணக்கில் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். ஆண்டுக்கு சுமார் இரண்டு கோடி பேர் வந்து செல்லும் ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி சுவாமி கோயில் தவிர இக்கோயிலுக்கு சொந்தமான பல கோயில்கள் ராமேஸ்வரம் நகர், கெந்தமாதன பர்வதம், தனுஷ்கோடி பகுதியில் அமைந்துள்ளது. தனியார் கட்டுப்பாட்டில் உள்ள பழமையான கோயில்கள் பலவும் இப்பகுதியில் உள்ளது.

ராமேஸ்வரம் தீர்த்த யாத்திரைக்கு வரும் பக்தர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பல்வேறு கோயில்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். மேலும், ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் அமைந்துள்ள குந்துகால் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், அப்துல்கலாம் நினைவிடம் தனுஷ்கோடி புயலால் சேதமடைந்த பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களையம் சுற்றிப்பார்க்கின்றனர்.

இன்று ராமேஸ்வரம் வருபவர்கள் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்வதுடன் இங்குள்ள அனைத்து முக்கிய இடங்களையும் சுற்றிப்பார்க்கும் வகையில் போக்குவரத்து வசதிகள் உள்ளது. முன்பு குதிரைவண்டி, ரிச்சா, நகர் பேருந்து, சில ஆட்டோக்கள் என்றிருந்த நிலை மாறி தற்போது ராமேஸ்வரம் நகரில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் நகருக்குள் உள்ளூர்வாசிகளின் வாகனங்கள், சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு பெரிய அளவில் பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.

முக்கிய சாலைகளில் ரோட்டோர ஆக்கிரமிப்புகளாலும், நீண்ட நேரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் நாள்தோறும் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், அலுவலர்கள், வர்த்தகர்கள் என பல தரப்பினரும் மிகுந்து சிரமத்துக்கு ஆளாகின்றனர். அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சில நேரங்களில் முன்னாள் செல்லும் வாகனங்களை கடந்து செல்ல முடியாமல் நோயாளிகள் தவிககும் நிலை ஏற்படுகிறது.

மேலும் நகரில் சாலை வாகன போக்குவரத்தை நடைமுறைபடுத்துவதில் முறையான திட்டமிடல் இல்லாததாலும், போக்குவரத்து போலீசார் பற்றாக்குறையினாலும் சாதாரன நாட்களில்கூட நகருக்குள் போக்குவரத்து குளறுபடியில் சிக்கி வாகன ஓட்டிகள் தவிப்பதும், சாலையில் அடிக்கடி போக்குவரத்து தடையும் வழக்கமாகிவிட்டது. உள்ளூர்வாசிகள், சுற்றுலா பயணிகள் நலன் கருதி ராமேஸ்வரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றுச்சாலைகள் அமைத்து, கார் பார்க்கிங் வசதியை மேம்படுத்தி வாகன போக்குவரத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும்.

ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்களின் சொந்த பயன்பாட்டிலுள்ள இருசக்கர வாகனங்கள், கார், பள்ளி,கல்லூரி வாகனங்கள், வாடகை ஆட்டோ, வேன், கார்கள், சரக்கு ஏற்றும் வாகனங்கள், அரசு பேருந்து, அரசு அலுவலக வாகனங்கள், ஆம்புலன்ஸ் உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இங்குள்ள பிரதான சாலைகளில் நாள் தோறும் ஒடுகிறது. இத்துடன் வெளியூர்களில் இருந்து அன்றாடம் வந்து செல்லும் நூற்றுக்கணக்கான சுற்றுலா, பள்ளி, கல்லூரி மற்றும் சரக்கு வாகனங்களும் இச்சாலைகளில்தான் பயணிக்கிறது.

ஆன்மிகம், சுற்றுலா, மீன்பிடித் தொழிலை மையமாக கொண்டுள்ள ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை உட்பட ராமேஸ்வரம் நகரிலுள்ள அனைத்து பிரதான சாலைகளும் விசாலமாகவே உள்ளது. ஆனால் அதிகாரிகளின் போதிய நடவடிக்கை இல்லாததால் அனைத்து சாலைகளும் ஆக்கிரமிப்பால் சுறுங்கிவிட்டது. ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முதல் வேர்கோடு வரையிலும் கோயில், அக்னிதீர்த்தம் கடற்கரை பகுதியிலும் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே வாகன போக்குவரத்து பிரச்சனைக்கு பாதி தீர்வு கிடைத்துவிடும்.

ராமேஸ்வரத்தில் நூற்றுக்கணக்கில் தங்கும் விடுதிகள் உள்ளது. இதில் ஒரு சில பெரிய ஓட்டல்கள் தவிர மற்றவற்றில் வாகன நிறுத்தும் வசதி இல்லை. இந்த விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகளின் பல நூறு வாகனம் விடுதிக்கு முன்பு சாலையோரம் நிறுத்தப்படுகிறது. இரண்டு சக்கர வாகனங்களில் கடைகளுக்கு செல்பவர்களும் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கின்றனர்.

ராமேஸ்வரம் கோயில் அருகாமையில் கோயிலுக்கு சொந்தமான 12 ஏக்கர் பசுப்பட்டி இடத்தில் 2011 ஆம் ஆண்டு ரூல 50 லட்சம் செலவில் கார்பார்க்கிங் அமைக்கப்பட்டது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தில் 400 வாகனங்கள் நிறுத்தலாம். மேற்கூரை இல்லாத இப்பார்க்கிங் வளாகத்தில் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு இல்லாததால் இங்கு 200 வாகனங்கள்கூட நிறுத்தப்படுவதில்லை. இந்த பார்க்கிங் வளாகத்தில் அரசால் மல்டிலெவல் கார் பார்க்கிங் ஏற்படுத்தப்பட்டால் இரண்டாயிரம் வாகனங்கள் வரை நிறுத்த முடியும்.

போக்குவரத்து தடை

மண்டபத்திற்கும்-பாம்பனுக்கும் இடையில் கடலில் அமைந்துள்ள அன்னை இந்திராகாந்தி சாலை பாலத்தின் பாதுகாப்பு கருதி பாலத்தின் மேல் வாகனங்கள் நிறுத்த, நிர்ணயிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பாலத்தில் செல்லும் வாகனங்கள் அதீத வேகத்தில் செல்வதுடன், பாலத்தின் மையப்பகுதி உட்பட அனைத்து பகுதியிலும் வாகனம் நிறுத்தப்படுகிறது. இதனால் பாலத்தின் வலுகுறைவதுடன், விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் தொடர்கிறது.

ராமேஸ்வரத்தில் வாகன போக்குவரத்தை சீரமைக்க தேசிய, மாநில நெடுஞ்சாலை, நகராட்சி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேவையான பகுதியில் ஒரு வழிப்பாதை போக்குவரத்தை ஏற்படுத்திடவும், இருசக்கர வாகன நிறுத்தம் உருவாக்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாம்பன் பாலத்தில் போக்குவரத்தை கண்காணித்து ஓழுங்குபடுத்திட பாலத்தின் மேல் போலீசார் செக்போஸ்ட் அமைப்பதுடன் நகருக்குள் தேவையான இடங்களில் போக்குவரத்து சிக்னல்களை அமைத்து வாகன இயக்கத்தினை முறைப்படுத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், தேவையான அளவிற்கு கூடுதலாக போக்குவரத்து காவலர்களை நியமிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு வழிச்சாலை அவசியம்

ராமேஸ்வரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரதான சாலைகள் கொண்ட லெட்சுமண தீர்த்தம், ராமர்தீர்த்தம் தெரு, மேலத்தெரு, நடுத்தெரு, திட்டகுடி நான்குமுனை சந்திப்பு, கடைத்தெரு, வர்த்தகன் தெரு, கிழக்கு கடைத்தெரு, கோயில் கார்பார்க்கிங் செல்லும் சாலை, மார்க்கெட் தெரு, ரயில்வே பீடர் ரோடு, துறைமுக வீதி, வேர்கொட்டு உள்ளிட்ட பகுதியில் இருசக்கர வாகனம், ஆட்டோ, கார்களின் போக்குவரத்து அதிகரிப்பதால் இப்பகுதியில் சிலவற்றை ஒருவழித்தடமாக மாற்றியமைத்து, இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கான டூவீலர் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும்.

Related Stories: