கொரோனா காலத்தில் டாக்டர் பணியை செய்ய முடியாதது வருத்தம்: சாய் பல்லவி

சென்னை: கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி, காளி வெங்கட் நடித்திருக்கும் படம், ‘கார்கி’. கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வெளியிடும் இப்படம், வரும் 15ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. இப்படத்துக்காக சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சாய் பல்லவி பேசியதாவது: மலையாளத்தில் ‘பிரேமம்’ படம் அதிகமான புகழ் கொடுத்தது. தமிழில் ‘மாரி’ படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் மேலும் அதிகமான புகழ் கொடுத்தது. ரசிகர்கள் என்மீது வைத்துள்ள மரியாதையும், அன்பும் நெகிழ வைக்கிறது. தெலுங்கில் ‘ஷ்யாம் சிங்கா ராய்’, ‘விராட பர்வம்’ ஆகிய படங்களில் என் அழுத்தமான நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தந்தைக்கும், மகளுக்குமான நெகிழ்ச்சியான சம்பவங்களை விவரிக்கும் ‘கார்கி’ படத்திலும் என் அழுத்தமான நடிப்புக்கு வரவேற்பு கிடைக்கும்.

இப்படம் முடிந்த பிறகு ரசிகர்கள் அழுதாலோ, வீட்டுக்குச் சென்று படத்தைப் பற்றி விவாதித்தாலோ அதுவே இப்படத்தின் வெற்றி. இப்படம் சம்பந்தமாக சூர்யா, ஜோதிகாவை சந்தித்தேன். சூர்யாவை பார்த்த எனக்கு பேச்சே வரவில்லை. அவரும், ஜோதிகாவும் படத்தை வெளியிடுவதை அறிந்தபோது, நான் தேர்வு செய்த கதை சரியானது என்று என்னை பாராட்டிக் கொண்டேன். அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடிக்கிறேன். வருங்காலத்தில் நான் படம் இயக்குவேன். அதற்கு என்னை ஆயத்தப்படுத்திக் கொண்ட பிறகுதான் அதில் ஈடுபடுவேன். அடிப்படையில் நான் ஒரு டாக்டர் என்பதால், கொரோனா பரவல் காலத்தில் ஏன் நான் டாக்டர் தொழிலை மேற்கொள்ளவில்லை என்று உண்மையாகவே வருத்தப்பட்டேன்.

Related Stories: