ஸ்ரீபெரும்புதூரில் திருநங்கையை அரிவாளால் வெட்டி செயின் பறிப்பு

ஸ்ரீபெரும்புதூர்:திருவள்ளூர் மாவட்டம் வயலூர் பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் என்கிற பாக்யா (38). திருநங்கையான இவர், ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கரை அரசு மதுபான கடை எதிரே குடிசை அமைத்து வசித்து வருகிறார். இவர் கள்ள சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பாக்கியா வீட்டில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. சுனில் தலைமையிலான போலீசார் பாக்கியாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், பாக்கியா கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வந்ததும், பாக்யாவுடன் 4 வருடங்களாக வசித்து வந்த திருவள்ளூரை சேர்ந்த இளைஞர் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் வேறொரு நபருடன் பாக்யா பழகி வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. மேலும், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்வதில்  ஏற்பட்ட தொழில் போட்டியால் பாக்யாவை கொலை செய்ய திட்டம் தீட்டினார்களா, செயின் பறிப்பின்போது அதை தடுத்த பாக்யாவை அரிவாளால் வெட்டினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: