×

குடிமகன்களின் ‘பார்’ ஆன ஆவடி ரயில் நிலையம்: பெண்கள் அச்சம்

ஆவடி: ஆவடி ரயில் நிலையத்தை மதுபிரியர்களின் மது அருந்தும் பாராக மாற்றிவிட்டனர்.  இதனால் அவ்வழியே செல்லும் பெண்கள் அச்சப்படுகின்றனர். ஆவடி ரயில் நிலைய பகுதி மற்றும் ஸ்டேஷன் சாலை வழியே நாள்தோறும் பெண்கள் உள்பட ஏராளமான மக்கள் ரயில்கள் மூலம் பல்வேறு பணிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். இப்பகுதியை ஆவடி அரசு மருத்துவமனை, கன்னிகாபுரம், காமராஜர் நகர் பகுதிக்கு செல்ல மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

இந்நிலையில், ஆவடி ரயில் நிலையம் அருகே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு பார் இல்லாத நிலையில், மதுபானங்கள் வாங்கும் பலர் ரயில் நிலைய பகுதிகளிலும் ரயில் நிலையத்திலும் வெட்ட வெளியில் அமர்ந்து ஹாயாக மது அருந்துகின்றனர். பின்னர் குடிபோதையில் பலர் அடிதடி தகராறிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவ்வழியே பணி முடிந்து வீடு திரும்பும் பெண்கள் அச்சப்படுகின்றனர். இப்பகுதியில் மது அருந்தும் பலர் காலி பாட்டில்களையும் நொறுக்குத்தீனி மிச்சம் மீதியுடன் பிளாஸ்டிக் கவர்களை போட்டுவிட்டுச் செல்கின்றனர். இதனால் ரயில்நிலைய பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இங்குதான் இப்படி என்றால், ஆவடியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் ஏரிக்கரை, வயல்வெளிகள், திறந்தவெளி பள்ளிக்கூடங்களை மதுபிரியர்கள் ஆக்கிரமித்து, வெட்டவெளியில் மது அருந்தும் பாராக மாற்றியுள்ளனர். இதனால் அங்கு மதுபிரியர்களுக்கும் கிராம மக்களுக்கும் இடையே  மோதல் ஏற்படும் சூழல் ஏற்படுகிறது. எனவே, இப்பிரச்னைகளை முற்றிலும் அகற்றுவதற்கு ரயில்நிலையப் பகுதிஉள்ளிட்ட பல்வேறு பொது இடங்களில் மது அருந்துவதற்கு தடை விதித்து, அங்கு மது அருந்துபவர்களை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Aavadi , Aavadi railway station becomes a 'bar' for citizens: women fear
× RELATED ஆவடி அருகே துப்பாக்கி முனையில் ரூ.1.50...