×

மலான் - லிவிங்ஸ்டன் அதிரடியில் இங்கிலாந்து ரன் குவிப்பு

நாட்டிங்காம்: இந்திய அணியுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், டேவிட் மலான் - லிவிங்ஸ்டன் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன் குவித்தது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. சவுத்தாம்ப்டன், பர்மிங்காமில் நடந்த முதல் 2 டி20 போட்டியிலும் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் வசப்படுத்திய நிலையில், 3வது மற்றும் கடைசி போட்டி நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். ராய், பட்லர் இணைந்து இங்கிலாந்து இன்னிங்சை தொடங்கினர். பட்லர் 18 ரன் எடுத்து ஆவேஷ் கான் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். ராய் 27 ரன் (26 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), பில் சால்ட் 8 ரன்னில் பெவிலியன் திரும்பினர். 4வது விக்கெட்டுக்கு டேவிட் மலான் - லயம் லிவிங்ஸ்டன் இணைந்து அதிரடியில் இறங்க, இங்கிலாந்து ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மலான் 30 பந்தில் அரை சதம் அடித்தார். அபாரமாக விளையாடி இந்திய பந்துவீச்சை சிதறடித்த இந்த ஜோடி 84 ரன் சேர்த்தது.

மலான் 77 ரன் (39 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்), மொயீன் அலி (0) இருவரும் ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய வீரர்கள் உற்சாகம் அடைந்தனர். எனினும், கடைசி கட்ட ஓவர்களில் லிவிங்ஸ்டன், புரூக், ஜார்டன் அதிரடியாக பவுண்டரி, சிக்சர்களை பறக்கவிட இங்கிலாந்து 200 ரன்னை கடந்தது. ஹாரி புரூக் 19 ரன், கிறிஸ் ஜார்டன் 11 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன் குவித்தது. லிவிங்ஸ்டன் 42 ரன்னுடன் (29 பந்து, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் பிஷ்னோய், ஹர்ஷல் தலா 2, ஆவேஷ் கான், உம்ரான் மாலிக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 216 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

Tags : Malan ,Livingston ,England , Malan-Livingston action for England to pile on the runs
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை